சமையல் சாம்ராஜ்யத்தின் மகாராணியாகத் திகழ சில குறிப்புகள்!

Healthy samayal...
Healthy samayal...Image credit - health.com

கோதுமை மாவு மிஷினில் அரைக்கும் போது ஒரு கிலோவுக்கு 50 கிராம் சோயா, 50 கிராம் சோளம் சேர்த்து அரைத்து வர மிகவும் சத்தான, மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

எந்த பாயசம் செய்வதாக இருந்தாலும் கடைசியாக 6 பாதாம் பருப்பு, 4 முந்திரிப் பருப்பு,2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து  மிக்ஸியில் நைசாக பொடித்து சேர்க்க சத்தும் சுவையும் கூடும்.

பாதாம் அல்வா செய்ய பாதாம் பருப்பை சூடான நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கையால் நசுக்க தோல் எளிதில் உரிந்து வந்துவிடும். முந்திரி கேக் செய்வதற்கு முன் அவற்றையும் சூடான நீரில் ஊற வைத்து அரைக்க  எளிதில் அரையும்.

இதையும் படியுங்கள்:
திறமைசாலிகள் உடன் இணைந்து செயல்படுங்கள்!
Healthy samayal...

கட்லெட் செய்யும்போது அதன் ருசி அதிகரிக்க 2 ரொட்டித் துண்டுகளை(bread) மிக்ஸியில் பொடித்து சேர்க்கலாம்.

தயிர் புளித்துவிட்டால் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை மணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட தயிர் புளிக்காது. இதே முறையில் தோசை மாவிலும் செய்யலாம்.

கிச்சனில் கரப்பான் பூச்சியின் நடமாட்டத்தை குறைக்க வெற்றிலை இரண்டை எடுத்து நன்கு கசக்கி அதனை அலமாரி மூலைகளில் போட்டு வைக்க கரப்பான் பூச்சி தொல்லை இராது.

அரைத்து வைத்த சாம்பார் பொடி எப்போதும் ஃப்ரெஷாக இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியை போட்டு வைக்க மணம் குணம் மாறாமல் இருக்கும்.

சாம்பார் செய்து இறக்கும் சமயம் ஒரு தக்காளி, 2 சின்ன வெங்காயம், அரை ஸ்பூன் தனியா மூன்றையும் சேர்த்து அரைத்து சாம்பாரில் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்க ருசி அதிகரிக்கும்.

samayal recipes...
samayal recipes...

பூண்டை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து உரிக்க அதன் மேல் தோல் எளிதில் வந்து விடும். தொக்கு ஊறுகாய் போட பூண்டை தோலுடன் சேர்த்து அரைக்கலாம் நன்கு அரைந்து விடும்.

சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இதற்கு சீரகம் 4 ஸ்பூன் எடுத்து நன்கு வறுத்து படபடவென்று பொரிந்ததும் எடுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து அரை ஸ்பூன் அளவு சீரகப்பொடியை எடுத்து தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட ஏப்பம் வருவது நின்றுவிடும்.

வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகம் இருந்தால் சிறிது மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அவை நடமாடும் இடங்களில் தெளித்து விடலாம். சிறிது பொடி உப்பைத் தூவலாம் அல்லது சிறிது பெருங்காயத்தூளை தூவிவிட எறும்பு தொல்லை இருக்காது.

வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை நன்கு சூடு செய்துவிட்டு நறுக்க கண்களில் எரிச்சலும் நீர் வடிதலும் இராது. தோசை செய்ய தனி கல்லும், சப்பாத்திக்கென தனி கல்லும் பயன்படுத்த தோசை விள்ளாமல், விண்டு போகாமல் வரும். அத்துடன் தோசைக்கு கனமான கல்லையும், சப்பாத்திக்கு அதிகம் கனமில்லாத கல்லையும் பயன்படுத்தலாம்.

வெந்தயக்கீரை மசியலோ சாம்பாரோ செய்யும் பொழுது சிறிதளவு வெல்லம் சேர்த்து சமைக்க கசப்பு தெரியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com