ஆடி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்து இறைவனுக்கு படைத்து விட்டு நாம் சாப்பிடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆடிக் கூழ்
தேவை:
பச்சரிசிமாவு _2 கப்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் _1/2 கப்
பச்சைப்பயிறு 1/2 கப்
கருப்புக்கட்டி _1/2 கிலோ
கட்டி தேங்காய்ப்பால் _1கப்
2 ம் தேங்காய்ப்பால் _1 _கப்
ஏலக்காய்த்தூள் _1 ஸ்பூன்
செய்முறை:
பச்சரிசி மாவில் சுடுதண்ணீர் ஊற்றி கரண்டியால் கிண்டி ஆறியதும் விரவி சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின் கருப்புக்கட்டியை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரையும் வரை சூடாக்கி வடிகட்டவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் உருண்டைகளை போட்டு பின் பச்சைப்பயிறை கழுவி போடவும். உருண்டையும், பயிறும் வெந்து வரும் போது, 2 வது தேங்காய் பாலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து கலக்கி அத்துடன் ஊற்றவும். பின்னர் தேங்காய் துண்டுகளை போட்டு கண் அகப்பையால் கிளறிவிடவும். பிறகு வடிகட்டி வைத்த கருப்புக்கட்டி தண்ணீரை ஊற்றி கிளறி கடைசியாக கட்டி தேங்காய் பாலை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். சுவையோ சுவை! மணமான ஆடிகூழ் ரெடி. செய்து பாருங்கள்.
ஆடிப் பால்
தேவை:
தேங்காய் _1 மூடி
பச்சரிசி _1 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் _1 ஸ்பூன்
சுக்குப்பொடி _1 ஸ்பூன்
வெல்லப்பொடி _1/2 கப்
நெய் _1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய், அரிசி, ஏலக்காய் தூள், சுக்கு பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் 1/2 கப் சுடு தண்ணீர் விட்டு அரைத்தால் பால் அதிக திக்காக கிடைக்கும். முதலில் எடுத்த பாலை தனியாக வைக்கவும். திரும்பவும் அரைத்து 2_வது பால், 3_வது பால் எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3_வது பாலை ஊற்றி அதில் வெல்லத் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைத்து. பின்னர் 2_வது பாலை ஊற்றி 5 நிமிடம் நன்கு காய்ந்த பிறகு முதல் பாலை ஊற்றி 1_நிமிடம் கொதித்து காய்ந்ததும் நெய் ஊற்றி கலந்து இறக்கி விடலாம். தேவைப் பட்டவர்கள் முந்திரி, திராட்சை நெய்யில் பொரித்து சேர்த்து கொள்ளலாம். அற்புதமான சுவையுடன் ஆடிப்பால் ரெடி.
ஆடிப் பாயாசம்
தேவை:
பாசிப்பருப்பு _3 ஸ்பூன்
பச்சரிசி _3 ஸ்பூன்
ஏலக்காய்_4
தேங்காய் துருவல் _3 கப்
வெல்லம் _1/4 கிலோ
நெய் _2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு, பச்சரிசி, ஏலக்காய் மூன்றையும் சிறிது வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு தண்ணீர் விட்டு கழுவி அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு மிக்ஸி ஜாரில் ஊறிய அரிசி பருப்பையும் தேங்காயையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் நைசாக அரைத்த கலவையை சேர்த்து, மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரையும் ஊற்றி மொத்தமாக 11/2 கப் தண்ணீர் இருக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் வைத்து கொதித்ததும் கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும். அரிசி பருப்பு வெந்ததும் வடிகட்டி வைத்த வெல்லத் தண்ணீரை ஊற்றி 5 _நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் தீயை அணைத்து விட்டு நெய் ஊற்றி கலந்து விட்டு இறக்கவும். சுவையான ஆடிப் பாயாசம் தயார்.