தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு 250 கிராம், ஜவ்வரிசி - 100 கிராம், புழுங்கலரிசி - 250 கிராம், வெந்தயம் – ½ டீஸ்பூன், டால்டா அல்லது ரீபைண்ட் ஆயில் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பாசிப் பருப்பு, ஜவ்வரிசி, வெந்தயம் மூன்றையும் தனித் தனியாய் வெறும் வாணலியில் மணம் வரும்வரை வறுக்கவும். இவற்றுடன் புழுங்கலரிசியையும் சேர்த்து மிஷினில் கொடுத்து நைசாய் அரைத்து மாவாக்கவும். இதை முந்திய நாளே செய்துகொண்டால் எளிதாய் இருக்கும்.
இந்த மாவுடன், தேவையான உப்பு மற்றும் டால்டா அல்லது ரீபைண்ட் ஆயிலைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கெட்டியாய்ப் பிசைந்துகொள்ளவும். பின் இடியாப்பத் தட்டுக்களில் பிழிந்து ஆவியில் வேகவிடவும். இதுவே பாசிப் பருப்பு நூடுல்ஸ்.
தொட்டுக் கொள்ள செள செள கிச்சடி:
தேவையான பொருட்கள்:
சௌ சௌ காய் - ஒரு சிறு பாதி, தேங்காய் – ½ மூடி, பச்சை மிளகாய் - 4, மிளகு – 5, கடைந்த தயிர் - 2 தம்ளர், கடுகு - தாளிக்க, உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்து மல்லி - சிறிது.
செய்முறை:
செள சௌ காயை, தோல் சீவி, மெல்லியதாய் நறுக்கி, 2 நிமிடம் வாணலியில் வதக்கவும். பின் தேங்காய், மிளகு. பச்சை மிளகாய், செள செள காய் அனைத்தையும் விழுதாக அரைத்துத் தயிரில் கலக்கி உப்பைச் சேர்க்கவும். அடுப்பை நிதானமாய் எரியவிட்டு, பொங்கி வரும் சமயம் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். கொத்துமல்லி தழையைத் துண்டுகளாக்கித் தூவவும். மேலே சொன்ன பாசிப் பருப்பு நூடுல்ஸுடன் சூடான கிச்சடி சேர்த்துப் பரிமாற சுவையான காலையுணவு தயார்.
- நித்யா, மதுரை.