
காலிஃப்லவர் மற்றும் உருளைக் கிழங்கு பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஆலு கோபியை நீங்கள் தனியாகவோ அல்லது உணவுக்கு சைட் டிஷ்ஷாகவோ செய்து சாப்பிடலாம். இந்தியாவின் பழமையான மற்றும் திருப்திகரமான இந்த உணவை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
2 கப் நறுக்கிய காலிஃப்லவர்.
1 கப் நறுக்கிய உருளைக்கிழங்கு.
1 நறுக்கிய பெரிய வெங்காயம்.
1 நறுக்கிய பெரிய தக்காளி.
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது.
1 தேக்கரண்டி சீரகம்.
1 தேக்கரண்டி மஞ்சள் தூள்.
1 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள்.
தேவையான அளவு உப்பு.
2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்.
தேவையான அளவு கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக பொரியவிடவும்.
2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை சமைக்கவும்.
3. இப்போது நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்றாக சமைக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
4. தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கிண்டிவிடவும்.
5. அனைத்து பொருட்களையும் சேர்த்த பின்னர் இறுதியாக நறுக்கி வைத்த காலிஃப்லவர் மற்றும் உருளைக் கிழங்கை சேர்த்து கலந்து விடவும். மசாலாப் பொருட்கள் காய்கறிகளுடன் நன்றாக சேரும் வரை கிண்டிவிடவும். பின்னர் பாத்திரத்தை மூடி மிதமான சூட்டில் சமைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விட வேண்டும்.
6. காய்கறிகள் நன்றாக வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால், சுவையான ஆலு கோபி ரெடி.
இதனை சப்பாத்தி, நாண் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ஆலு கோபியின் சுவை சும்மா அள்ளும்.