

வேலைக்குச் பெண்கள் அவசர அவசரமாக செல்லும்போதும். வேலையிலிருந்து களைப்பில் வீட்டிற்கும் வரும்போதும், எப்போதும் எளிமையான முறையில் செய்யும் உணவையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அதேசமயம் தினமும் செய்வதையே செய்து சாப்பிட ஒரு சலிப்பு ஏற்படும். அந்த வகையில் சுவையான மற்றும் எளிமையான முறையில் செய்யப்படும் சில ரெசிபிகள் பற்றிப் பார்ப்போம்.
பன்னீர் ஜல்ஃப்ரேசி
முதலில் பனீரை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அதே கடாயில் பனீரை எடுத்துவிட்டு சீரகம் மற்றும் கலோஞ்சி சேர்க்கவும். சீரகம் நன்றாக வதங்கியதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளி, குடைமிளகாய், கேரட் ஆகியவை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். ஒரு 3 – 5 நிமிடங்களுக்கு பின்னர் பனீர் சேர்த்து கெட்டியாகும் வரை சுட வைக்கவும். கடைசியாக சிறிது உப்பு, கரம் மசாலா ஆகியவை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
இந்த ரெசிபி சப்பாத்தி, தோசை, புலாவ் ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
காலிஃப்ளவர் ஃப்ரைட் ரைஸ்
கடாயில் எண்ணெய் விட்டு , நறுக்கிய வைத்துள்ள கேரட், பீன்ஸ், வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அரைப் பதம் வெந்த பிறகு சாதம் சேர்த்து அதில் தேவையான அளவு மிளகு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக பொரித்து வைத்த காலிஃப்ளவர் சேர்த்து இறக்கி வைக்கவும். இந்த காலிஃப்ளவர் ஃப்ரைட் ரைஸ் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
க்ரீம் காளான் பாஸ்தா
முதலில் கடாயில் நிறைய தண்ணீர் ஊற்றி பாஸ்தா வேகும் வரை சமைக்கவும். பின் இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காயம், மிளகாய், குடமிளகாய் ஆகியவை சேர்த்து ஒரு நிமிடம் கிண்டவும். கொஞ்சம் உப்பு சேர்த்து, பின்னர் காளானை பொன்னிறமாகும் வரை கொதிக்க விடவும். துளசி மற்றும் ஆர்கனோ சேர்த்து வதக்கிய பின்னர் மைதாமாவு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலக்கவும். பின்னர் பால் ஊற்றி கெட்டியாகும் வரை சமைக்கவும். பிறகு வடித்த பாஸ்தாவை கலந்து நன்றாக சூடாக்கவும்.
பின்னர் எடுத்து சூடாக சாப்பிட்டால் க்ரீம் பாஸ்தா மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது இரவில் சாப்பிடுவது இன்னும் இதமாக இருக்கும்.
-பாரதி