அல்வா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ஆரோக்கியமான அல்வா என்றால் சொல்லவே தேவையில்லை. அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய ஒரு இனிப்பு வகைதான் ஆப்பிள், ராகி அல்வா. ஆப்பிளையும் ராகியையும் சேர்த்து செய்யப்படும் இந்த அல்வாவில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. உங்கள் விருந்தினர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்றால் இந்த ரெசிபியை முயற்சித்து பாருங்கள். உண்மையிலேயே இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
3 சிறிய அளவிலான ஆப்பிள்கள்
1 கப் ராகி மாவு
1 கப் பால்
½ கப் வெல்லம்
2 ஸ்பூன் நெய்
¼ ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
ஒரு கைப்பிடி நறுக்கிய நட்ஸ்
உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும், தோல் சீவி நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் போட்டு மென்மையாகும் வரை சில நிமிடங்கள் வதக்குங்கள்.
தனியாக ஒரு கிண்ணத்தில் ராகி மாவை பால் சேர்த்து கலந்து கட்டிகள் இல்லாமல் பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளவும்.
ஆப்பிள் வெந்து மென்மையானதும் ராகி மாவு கலவையை சேர்த்து கட்டிகள் வராமல் கிளறவும்.
இப்போது அந்தக் கலவையில் வெல்லம் உப்பு சேர்த்து கலக்கி, குறைந்த வெப்பத்தில் சிறிது நேரம் சமைக்கவும்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாவு கெட்டியானதும், அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா பதம் வந்துவிடும்.
இறுதியில் கொஞ்சமாக நெய், ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ் சேர்த்து, நன்கு கிளறி விட்டு மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிட்டால், சூப்பரான சுவையில் ஆப்பிள் ராகி அல்வா தயார்.
அவ்வளவுதான், இறுதியில் அல்வாவை வேறு கிண்ணத்திற்கு மாற்றி, அதன் மேலே கொஞ்சமாக நட்ஸ் தூவி அலங்கரித்தால் அல்வா சாப்பிடத் தயார்.