பாயாசம், இந்தியாவின் ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும். அதன் க்ரீமி அமைப்பு, வித்தியாசமான சுவை மற்றும் நறுமணத்தால், பலரது சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும் ஒரு அற்புதமான உணவு. கோடை காலம் தொடங்கிவிட்டதால் நமது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், உடலை குளிர்ச்சியாக்கும் பாதாம் பிசின் பாயாசம் எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பிசின் 10 கிராம்
பால் 1 லிட்டர்
சர்க்கரை தேவையான அளவு
ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி
ஊறவைத்த பாதாம் 1/4 கப்
நெய் 2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு 1 ஸ்பூன்
காய்ந்த திராட்சை 1 ஸ்பூன்
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் பாதாம் பிசினை சுமார் 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவை நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி பாதாம் பிசினை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். பின்னர் தீயைக் குறைத்து பாதாம் பிசினை அதில் சேர்க்கவும். இந்தக் கலவையை சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வேக விடுங்கள்.
பின்னர் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி விடவும். அடுத்ததாக ஏலக்காய் தூள் சேர்த்து கொஞ்ச நேரம் அப்படியே கொதிக்க விடுங்கள்.
இப்போது ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் அப்படியே எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்தில் சேர்த்துக் கிளறினால், அட்டகாசமான சுவையில் பாதாம் பிசின் பாயாசம் தயார்.