
இந்த மாதம் அதிகம் கிடைக்கும் காய் வகைகளில் ஒன்று பரங்கிக்காய். காய் அறுக்கும் போது உள்ளே இருக்கும் விதைகளை கீழே எறியாமல் அதில் கேக் செய்து கொடுங்கள். இதிலிருக்கும் சத்துக்கள் உடனடி சக்தி தரும் உடலுக்கு. உடனடி பாராட்டுகள் வரும் உங்களுக்கு.
இனி பரங்கிவிதை கேக் செய்முறை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பரங்கி விதை - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
நெய் - 50 கிராம்
சர்க்கரை -200 கிராம்
பால் - 300 மில்லி
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
வெள்ளரி விதை - இரண்டு தேக்கரண்டி டூட்டி ஃப்ரூட்டி - 10 கிராம்
செய்முறை:
பரங்கிவிதைகளை காயவைத்து எடுத்து தோலை உரித்து விட்டு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும். அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காயை சேர்த்து மிக்சியிலிட்டு நைசாக வெண்ணையைப் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சுத்தமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு அதனுடன் பால், சர்க்கரை, நெய் விட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். தீ மிதமாகவே இருப்பது அவசியம். கைவிடாமல் கிளறி பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய சதுர பிளேட்டில் கொட்டி சமமாக பரப்பி விடவும்.
அதன் மேல் இரண்டு மூன்றாக உடைத்த முந்தரிப் பருப்பு மற்றும் வெள்ளரி விதைகள் டூட்டி ஃப்ரூட்டியை தூவி லேசாக அழுத்தி அலங்கரிக்கவும். சூடு ஆறியதும் கீற்றுகள் போட்டு சாப்பிடலாம். சுவையான பரங்கிக்காய் கேக் ரெடி.
குறிப்பு : சர்க்கரைக்குப் பதில் நாட்டுக்கர்க்கரையும் சேர்க்கலாம்.