பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் அல்லது தக்காளி குருமா என்ற தொட்டுக்கொள்ள இருக்கும். ஆனால் வடநாட்டு சமையல் தமிழ்நாட்டில் உள்ளே நுழைந்ததும் அறிமுகமான முதல் ரெசிபி இந்த சென்னா மசாலா தான். சென்னா என்றால் கொண்டைக் கடலை. இந்த கொண்டைக்கடலை மிக சத்து மிகுந்தது என்பதால் சென்னா மசால் பட்டூரா எனப்படும் பெரிய சோலா பூரிக்கும் நம் வீடுகளில் செய்யப்படும் பூரி சப்பாத்திக்கும் துணையாக உள்ளது. குழந்தைகளுக்கு மிக சத்துமிக்க இந்த சென்னா மசாலா கிரேவி ரெசிபி இதோ.
குறிப்பு - கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்க மறந்து விட்டால் கொதிக்கும் நீரில் தேவையான கொண்டை கடலையை ஹாட் பாக்சில் போட்டு மூடி வைத்தால் 3 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து கடலையை குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டால் வெந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
சென்னா எனப்படும் வேகவைத்த கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
பட்டை சோம்பு - சிறிது
கருவேப்பிலை கொத்துமல்லி- சிறிது
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சன்னா மசாலா -3 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்
தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
முந்திரி- 10
உப்பு தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
(உருளைக்கிழங்கு) - அதிகம் தேவையெனில் 2 மசித்து சேர்க்கலாம்.
செய்முறை:
முதலில் குக்கரில் சென்னாவை நன்கு வேகவைக்கவும். தேங்காயுடன் பட்டை, சோம்பு, முந்திரி அரைத்து வைக்கவும். ஒரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறிது சீரகம் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கி வாசம் வந்ததும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் அதில் தந்துள்ள மசாலா தூள்கள் சேர்த்து நன்றாக கிளறவும். பின் அரைத்த தேங்காய் முந்திரி விழுதைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து கிளறவும் கொதித்ததும் வேகவைத்த சென்னாவைப் போட்டு மிதமான தீயில் மூடி போட்டுக் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும் கொத்துமல்லித் தழை தூவி சூடான பூரியுடன் பரிமாறவும்.
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் பூரி சென்னா கிரேவி. நீங்களும் செய்து பாருங்கள். நிச்சயம் பாராட்டு கிடைக்கும்.