
பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தை சேர்த்து குழம்பு வைப்பது மற்றும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்வது ருசியை கூட்டுவதுடன், உடலுக்கும் நன்மை தரக்கூடியது. சின்ன வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கும் சின்ன வெங்காயம் தீர்வாக உள்ளது. கடும் ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை ஒன்றெடுத்து மென்று சாப்பிட ஜலதோஷம் பறந்து போகும்.
சின்ன வெங்காய காரக்குழம்பு (Chinna Vengaya Kara Kuzhambu)
தேவையானவை:
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
பூண்டு - 5 பற்கள்
புளி - எலுமிச்சையளவு
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
குழம்புப் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானது
வெல்லம் - சிறு துண்டு
நல்லெண்ணெய் - 1 கரண்டி
தாளிக்க - கடுகு, சீரகம், வெந்தயப்பொடி, கறிவேப்பிலை
செய்முறை:
பூண்டை தோல் நீக்கி தட்டி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிட்டு தோல் உரிக்க கண்களிலிருந்து கண்ணீரும் வராது, உரிப்பதும் சுலபமாகும். புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி, கறிவேப்பிலை சிறிது சேர்த்து கடுகு பொரிந்ததும் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) சேர்த்து வதக்கி கண்ணாடிப் பதம் வந்ததும் தக்காளியை சேர்த்து வதக்கவும். இப்பொழுது தேவையான உப்பு, தனியாத் தூள், மிளகாய்த் தூள், சாம்பார் பொடி சேர்த்து வதக்கி அதில் புளிக்கரைசலை விடவும். நன்கு கொதிக்கட்டும். புளி வாசனை போனதும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு சிறு துண்டு வெல்லம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க மிகவும் ருசியான சின்ன வெங்காய காரக்குழம்பு தயார்.
குறிப்பு: காரக் குழம்பிற்கு நல்லெண்ணெய் விட்டு செய்வது ருசியைக் கூட்டும். சிறு துண்டு வெல்லம் சேர்ப்பது, உப்பு, காரத்தை சமப்படுத்தி ருசியைக் கூட்ட உதவும். காரசாரமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் மிளகாய்த் தூளை சிறிது கூட சேர்த்துக் கொள்ளலாம். பூண்டு, வெங்காயம் இருப்பதால் பெருங்காயம் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. காரக்குழம்பிற்கு கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் விட்டு குழம்பை நன்கு வற்ற விட ருசி கூடும்.