.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
ஆங்கிலத்தில் பாப்கார்ன் என்றும், தமிழில் மக்காச் சோளம் என்றும், இந்தியில் மகாய் என்றும் அழைக்கப்படும் சோளமுத்துகள் தினை வகைகளில் ஒன்று. இதில் உடல் நலன் தரும் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை வேகவைத்த சுட்ட மற்றும் பொரித்த பாப்கார்ன்களை விரும்புவார்கள். இந்த சோளம் அரைத்து மாவாகவும், ரவையாகவும் பல உணவு வகைகளில் பயன்படுத்தப் படுகிறது. கடைகளில் சோளரவை கிடைக்கும். இதில் கொழுக்கட்டையும் இட்லியும் செய்து அசத்தலாம் வாங்க…
சோளரவா கொழுக்கட்டை
தேவை:
மக்காசோள ரவை - 1கப்
கடலைப் பருப்பு -1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் அல்லது நெய்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை. - சிறிது
செய்முறை:
அடி கனமான கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர் விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப் போட்டு அதனுடன் பெருங்காயம் தேங்காய்த் துருவல் உப்பு போட்டு நன்கு கிளறி மூடி அடுப்பை `சிம்'மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும். இல்லையெனில் அடிப் பிடித்துவிடும். கெட்டியாகி மாவு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், இறக்கி தட்டில் பரத்தி ஆறவைக்கவும். ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லிப்பானைத் தட்டில் துணி போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுத்தால் சுவையான சத்தான கொழுக்கட்டை தயார். இதில் வதக்கிய வெங்காயம், கேரட் போன்றவற்றை சேர்ப்பது அவரவர் விருப்பம்.
சோளரவா இட்லி:
தேவையான பொருட்கள் அளவு
சோள ரவா - 1 கப்
ஓட்ஸ்- 1/2 கப்
சாதா ரவை - ½ கப்
தயிர் 2 கப்
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு -1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்ப - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
துருவிய கேரட்- 1/4 கப்
கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி
சமையல் சோடா- ஒரு சிட்டிகை
செய்முறை:
சோளரவை மற்றும் ஓட்ஸை மிக்சியில் இட்டு கரகரப்பான பொடியாக அரைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு மற்றும் ரவியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, அதனுடன் சோள ரவா மற்றும் ஓட்ஸ் தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் துருவிய கேரட் , உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கடாயை மூடி, மாவை 20 நிமிடம் அப்படியே வைக்கவும்.
இதற்கிடையில், இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து ஆவி வந்ததும் இட்லித் தட்டுகளில் நெய் அல்லது எண்ணெய் தடவி வைக்கவும். இப்போது ஊறிய மாவில் சமையல் சோடா மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சிறிது கெட்டியாக தட்டுகளில் ஊற்றி 10 லிருந்து15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். சூடான, மென்மையான இட்லிகளை சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறினால் சுவையுடன் வயிறு நிரம்பும்.