

தேவை:
உருளைக்கிழங்கு – 250 கிராம், தயிர் – 3 கப், பிரட் ஸ்லைஸ் – 2, கொப்பரைத் தேங்காய் – 1 கப் (துருவியது), உலர்ந்த திராட்சை – 20 கிராம், பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கியது), மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், சீரகப் பொடி (வறுத்தது) –
1 டீஸ்பூன், சர்க்கரை – 1 டீஸ்பூன், ரீபைன்டு ஆயில் – 250 மி.லி., பொடி உப்பு – தேவையானது.
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து மசித்துக்கொள்வும்.
பிரட் துண்டுகளை தண்ணீரில் போட்டெடுத்து, பிழிந்து, உருளைக்கிழங்கு மசியலுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு தட்டில் கொப்பரை, திராட்சை, சர்க்கரை, பொடி உப்பு, மிளகாய்ப்பொடி, வறுத்த சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவைகளைப் போட்டு கலக்கவும். கலவை ரெடி.
கையில் லேசாக தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உருளைக்கிழங்கு மசியலை எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து பூரிபோல் இட்டு, நடுவே சிறிது கலவையை வைத்து மூடி ஓரங்களை ஒட்டிவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் கூஜியாக்களைப் (சோமாசி) போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கெட்டித் தயிரை லேசாக சிலுப்பி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு மிக்ஸ் செய்யவும்.
தட்டு ஒன்றில் பொரித்தெடுத்த கூஜியாக்களை (சோமாசி) அழகாக அடுக்கி வைத்து அதன்மீது பரவலாக தயிரை ஊற்றி, பொடியாக அரிந்த கொத்துமல்லி மற்றும் தாளித்த சீரகத்தை மேலே லேசாக தூவவும். தேவைப்பட்டால், இனிப்பு சட்னியையும் கொஞ்சம் பரவலாக விடலாம்.
மிகவும் டேஸ்ட்டியாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் இந்த ஐட்டம். பார்க்கையில் கலர்ஃபுல்லாக இருக்கும்.
இனிப்பு சட்னி தயாரிக்கும் விதம்:
தேவையான அளவில் புளி, வெல்லம், இஞ்சி, வறுத்த சீரகம், உப்பு ஆகியவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
புளியை தண்ணீரில் ஊறப்போட்டு, பிறகு கரைத்து, கெட்டியாக எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகத்தை தாளித்து நறுக்கிய இஞ்சியைப் போட்டு வதக்கி, பின் புளி தண்ணீர், வெல்லம், உப்பு ஆகியவைகளை இத்துடன் மிக்ஸ் செய்து, கொதிக்கவிட்டு, கெட்டியானபிறகு இறக்கி உபயோகிக்கவும்.