ஹோட்டல் மட்டுமல்ல, வீடுகளிலும் இதை செய்யாதீங்க! உங்களை அறியாமலேயே உடலுக்குள் செல்லும் நச்சு!

newspaper
newspaperimage source:hindu
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் தெருவோரக் கடை வியாபாரிகள் செய்தித்தாள்களில் உணவுகளை கட்டி பேக் செய்ய அல்லது பரிமாறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாக எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் தின்பண்டங்களையும் , தெருவோர உணவுகளையும் செய்தித்தாள்களில் சுற்றித் தருவது நீண்ட காலமாக இருந்து வரும் பொதுவான நடைமுறையாக இருந்தாலும் இனி உணவுப் பொட்டலங்களுக்குச் செய்தித்தாள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் பிரபலமான வடா பாவ் விற்பனையாளர் ஒருவர், உணவைச் செய்தித்தாள்களைக் கொண்டு சுற்றிய சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஜூன் 5 அன்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பின்படி, உணவுகளை செய்தித்தாள்களில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை சுட்டிக் காட்டியும் மற்றும் மாசுகளுடன் தொடர்புடைய சாத்தியமான சுகாதார அபாயங்கள் காரணமாக உணவு வணிக நிறுவனங்கள் செய்தித்தாள்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று உணவு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

என்ன விளைவுகள் தெரியுமா?

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மை , ஈயம் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் கன உலோகங்களைக் கொண்டுள்ளதால், சூடான அல்லது எண்ணெய் பலகாரங்கள் அதன் மேல் படும்போது அந்த நச்சுகள் உணவோடு கலந்து உடலுக்குள் சென்று கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், செய்தித்தாள்கள் பலரது கைகள் மாறி வரும்போது அவற்றில் பல்வேறு கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளதால், அவை உணவு மூலம் பரவும் கொடிய நோய்களை உருவாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் FSSAI-யின் மேற்கு மண்டலமும், பிருஹன்மும்பை மாநகராட்சியும் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தன என்றும் மற்ற ஆய்வுகளின் போது, ​​அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட பேக்கேஜிங் பொருட்கள் குறித்து விற்பனையாளர்களுக்கு விளக்கமளித்ததுடன், விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகளையும் விடுத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும் உணவுத் தரக் காகிதம், பட்டர் பேப்பர் அல்லது பிற பாதுகாப்பான மாற்று வழிகளுக்கு மாறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இன்னும் பரவலாகத் தொடரும் இந்த சுகாதார சீர்கேடு பழக்கம் குறித்த கவலைகளுக்கு இடையில் தெருவோர வியாபாரிகள், கேட்டரிங் நிறுவனங்கள், விரைவுச் சேவை உணவகங்கள் , உணவுக் கடைகள், நடமாடும் உணவு விற்பனையாளர்கள் மற்றும் சிறு சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகங்களும், உணவைப் பொட்டலமிட, பரிமாற அல்லது சேமித்து வைக்க செய்தித்தாள்கள் அல்லது அச்சிடப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று FSSAI தற்போது உத்தரவிட்டுள்ளது மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியாகிறது. இனி பொது இடங்களில் மக்கள் செய்தித்தாள்களில் மடித்துத் தரப்படும் உணவுகளை வாங்கி உண்ண வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உணவகங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் பலகாரங்களில் உள்ள எண்ணெயை உறிஞ்சுவதற்காக செய்தித்தாள்களை பயன்படுத்துவதை நாம் தவிர்ப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
MAA BEHEN திரைப்பட விமர்சனம்: குடும்பத்துடன் நெட்பிளிக்ஸில் பார்க்கலாமா?
newspaper
logo
Kalki Online
kalkionline.com