
வெள்ளரிக்காய் அல்வா
தேவை:
வெள்ளரிக்காய் - கால் கிலோ
பசும்பால் - ஒரு கப்
சர்க்கரை - அரை கிலோ
நெய் - 1 கப்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
முந்திரிப் பருப்பு ஒடித்தது - 8
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
வெள்ளரிக்காய்களை துருவவும். பாலை சுண்டக் காய்ச்சி, அதில் இந்த துருவலை வேகவைக்கவும். சர்க்கரையை கம்பி பாகாக காய்ச்சி, வெந்த வெள்ளரிக்காய் துருவலை அதில் கலந்து, நெய் சிறிது சிறிதாக விட்டு, கைவிடாமல் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ கலந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும். சூடு ஆறியதும், விருப்பமான வடிவில் வில்லைகள் போடவும். சுவையான, சத்தான வெள்ளரிக்காய் அல்வா தயார்.
உருளைக்கிழங்கு தோசை
தேவை:
புழுங்கல் அரிசி - 2 கப்
உருளைக்கிழங்கு பெரியது - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பழுங்கல் அரிசியை களைந்து, இரண்டு மணிநேரம் நீரில் ஊற வைத்து, நைசாக அரைக்கவும். உருளைக் கிழங்குகளை வேக வைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து, மாவுடன் கலக்கவும். உப்பு போட்டு, ஏழெட்டு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இதற்கு உளுந்தம் பருப்பு தேவை இல்லை. சுவையான, மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு தோசை தயார்.
குதிரைவாலி பர்பி
தேவை:
குதிரைவாலி மாவு - ஒரு கப்,
மில்க் பவுடர் - முக்கால் கப்,
கன்டன்ஸ்டு மில்க் - அரை கப்,
பசும் பால் - 50 மி.லி,
நெய் - இரண்டு ஸ்பூன்
வெண்ணெய் - இரண்டு ஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 5 (பொடித்தது)
செய்முறை:
கடாயில் குதிரைவாலி மாவை சற்று வறுத்த பின், முந்திரி, பாதாம் பவுடர், பால் பவுடர், பால், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். நன்றாக சேர்த்து வந்ததும் நெய் சேர்த்து கிளறிவிடவும்.
பால்கோவா பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவிவிடவும். பத்து நிமிடங்கள் கழித்து, சிறிய துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்க,. சுவையான, சத்தான குதிரைவாலி பர்பி ரெடி.
வரகரிசி தட்டை
தேவை:
வரகரிசி - கால் கிலோ உளுந்து மாவு - 6 ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன் மிளகாய்தூள் - 10 - 15
எள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் : 2 சிட்டிகை
உப்பு, எண்ணெய் :
தேவைக்கேற்ப
செய்முறை:
வரகரிசியை கழுவி, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும். அரைத்த மாவில் மிளகாய்தூள், எள், உளுத்தம் பருப்பு மாவு, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சுத்தமான துணியில் உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டவும். 2 நிமிடம் காயவைத்து, பின் எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவையான வரகரிசி தட்டை தயார்.