இதுவரை பக்கோடா கடலை மாவில் மட்டுமே செய்து நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஒருமுறை பெங்காலி ஸ்டைலில் அரிசி பக்கோடா செய்து பாருங்கள். குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டு உங்களை நச்சரிப்பார்கள். இது ஒரு செம டேஸ்டியான மாலை நேர சிற்றுண்டியாகும்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - ½ கப்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - ¼ கப்
வெங்காயம் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 1 துருவியது
மல்லித்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கசூரி மேத்தி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சைப் பருப்பு, கடலை பருப்பு, பச்சரிசியையும் நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் துருவிய உருளைக்கிழங்கு கொத்தமல்லி தழை வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை மாவுகளுடன் சேர்த்து வடை பதத்திற்கு கெட்டியாக மாவை பிசைந்துகொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் இறுதியில் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வடை போலவோ அல்லது சிறு சிறு துண்டுகளாக கிள்ளி போட்டால் பக்கோடா வடிவம் வரும். இதில் எது உங்களுக்குப் பிடிக்குமோ அப்படி எண்ணெயில் பொரித்தால், சுவையான பெங்காலி அரிசி பக்கோடா தயார். இது நாம் சாதாரணமாக செய்யும் பக்கோடாவின் சுவையை விட சாப்பிட நன்றாக இருக்கும்.
ஒருமுறை இதை முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.