வெந்தயக் குழம்பை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு சிறுவர்கள் விரும்ப மாட்டார்கள். காரணம் அதன் கசப்புத் தன்மை தான். அதற்கு தகுந்தவாறு கூட்டு, பொரியல் செய்து பரிமாறினால் அசத்தலாக இருக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக இருக்கும். அதன் செய்முறை விளக்கத்தை இதில் காண்போம்.
வெந்தயக் குழம்பு:
செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் அரிந்தது -அரை கப்
பூண்டு உரித்தது -கால் கப்
புளிக் கரைசல் -கால் கப்
சாம்பார் பொடி -3 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தய தூள்- ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
தாளிக்க தேவையான - கடுகு, வெந்தயம்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தாராளமாக எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொதிக்கவிடவும். கொதிக்கும் பொழுது வெந்தய பொடியை சேர்க்கவும். நன்றாக குழம்பு பதம் வந்து வாசனையுடன் எண்ணெய்
கசிந்து வரும்போது இறக்கிவிடவும். கம கம வாசனை உடன் வெந்தயக் குழம்பு ரெடி.
எண்ணெய் கத்தரிக்காய் :
செய்யத் தேவையான பொருட்கள்:
ஆலிவ் கலர் கத்தரிக்காய் -ஐந்து
தேங்காய் துருவல்- கால் கப்
பாதாம் -7
வறுத்த வேர்க்கடலை- ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப
கடுகு ,கருவேப்பிலை ,கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு தாளிப்பதற்கு போதுமான அளவு
சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கவும். பாதாமை உடைத்து தேங்காய் மற்றும் வேர்க்கடலையுடன் சேர்த்து பொடித்து வைக்கவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிப்புக்கு கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் கத்திரிக்காயை அதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீரை கொஞ்சமாக தெளித்து, சாம்பார் பொடி யை மேலே தூவலாக போட்டு வேக விடவும். இந்த கத்திரிக்காய் சீக்கிரமாக வெந்துவிடும். ஆதலால் கவனமாக உடைந்து விடாதபடி அவ்வப்பொழுது திருப்பி விடவும். வெந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து நன்றாக புரட்டி எடுக்கவும். கலவையுடன் கத்திரிக்காய் நன்றாக வெந்து வாசம் வரும் பொழுது இறக்கி வெந்தய குழம்புடன் சேர்த்து பரிமாற அசத்தலாக இருக்கும். விருப்பப்பட்டால் சிறிதளவு லெமன் சாறு கலந்து கொள்ளலாம்.