

மின்னக் கீரை (முன்னைக் கீரை என்றும் அழைக்கப் படுகிறது) என்பது நரம்பு தளர்ச்சியை போக்கும். வாத நோய்களைப் போக்கும். தொப்பையை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரும நோய்களை குணப்படுத்தும். சரும நோய்களை குணப்படுத்த இந்த இலைகளை பசும்பாலில் அரைத்து சாப்பிடும் வழக்கமும் உள்ளது. மரத்திலிருந்து வரும் கீரை இது.
ஒரு வகையான மணம் கொண்ட இந்தக் கீரையைக் கொண்டு குழம்பு, மோர் குழம்பு என செய்து ருசிக்கலாம். நகர்ப்புறங்களில் இந்த கீரை கிடைப்பது ரொம்பவும் அரிதாக உள்ளது. கீரைக்கார அம்மாவிடம் சொல்லி வைத்தால் கொண்டு வந்து தருவார்கள். இது ஒரு சுவையான கிராமத்துக் குழம்பாகும்.
மின்னக்கீரை புளிக் குழம்பு:
மின்னக் கீரை ஆய்ந்து பொடியாக நறுக்கியது. 2 கப்
சின்ன வெங்காயம் 10
தக்காளி 2
பூண்டு 6 பற்கள்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியாத்தூள் 1 ஸ்பூன்
புளித் தண்ணீர் 2 கப்
உப்பு தேவையானது
எண்ணெய் 2 ஸ்பூன்
கீரையை நன்கு கழுவி நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். குழம்பிற்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து நறுக்கிய கீரையையும் போட்டு நன்கு வதக்கவும்.
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து, வதக்கிய கீரையில் சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு: குழம்பை இறக்கும் சமயம் தேங்காய் பால் அரை கப் விட்டு இறக்க மேலும் சுவை கூடும்.
மின்னக் கீரை மோர் குழம்பு:
மின்னக் கீரை 2 கப்
கெட்டிமோர் 2 கப்
கடலை மாவு 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
காரப்பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க: தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 ஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் கிள்ளியது 1, கறிவேப்பிலை சிறிது
மின்னக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கெட்டி மோரில் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கார பொடி சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கிள்ளியது ஒன்று சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நறுக்கிய கீரையையும் போட்டு அதற்கு தேவையான உப்பு சிறிதும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மோர் கலவையுடன் சேர்க்கவும். இந்த கலவையை குறைந்த தீயில் வைத்து ஒரு நிமிடம் கைவிடாமல் தொடர்ந்து கிளறி, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். கொதிக்கவிட வேண்டாம். மிகவும் ருசியான, சத்தான மோர்க்குழம்பு தயார்.