
தேங்காய் சேர்க்காத குழம்பா? அதுவும் சூடான சாதம், இட்லி, தோசை, பொங்கலுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றதா? ஆச்சரியப்பட வேண்டாம். சுவையில் அள்ளும் இந்த குழம்பை ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம். எதுவும் அரைக்கத் தேவையில்லை. எப்படி செய்வது என்று பார்ப்போமா?
புளித்த மோர் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
இஞ்சி துருவல் ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் இரண்டு
காய்ந்த மிளகாய் ஒன்று
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி அரை ஸ்பூன் காரப்பொடி அரை ஸ்பூன்
தாளிக்க:
கடுகு,
வெந்தய பொடி ஒரு ஸ்பூன் அல்லது வெந்தயம்
கறிவேப்பிலை சிறிது
தேங்காய் எண்ணெய்
கெட்டி தயிராக இருந்தால் அதனை தண்ணீர் விட்டு நன்கு சிலுப்பிக் கொள்ளவும். மோர் புளிப்பாக இருந்தால் சுவை கூடும். எனவே புளித்த மோரை உபயோகப்படுத்துவது நல்லது.
அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் தாராளமாக விட்டு (நான்கு ஸ்பூன்) கடுகு, வெந்தயம் அல்லது வெந்தயம் பொடி, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு செய்யவும். அப்பொழுதுதான் கருகாமல், சுவை குன்றாமல் இருக்கும்.
கடுகு வெடித்ததும் கரைத்து வைத்துள்ள மோரை விட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், காரப்பொடி, பெருங்காயப்பொடி, இஞ்சியை ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி துருவியது ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதி வருவதற்கு முன், பொங்கி வரும் சமயத்தில் இறக்கவும். சூப்பரான மணக்கும் மோர் வெஞ்சார் தயார்.
இதனை சூடான சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். பொங்கல், இட்லி, தோசைக்கும் ஏற்ற சைட் டிஷ். செய்வது ரொம்பவும் சுலபம். மோர் மட்டும் இருந்தால் போதும் ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.