ருசியாய் சுவையாய்!

ருசியாய் சுவையாய்!
Kalki vinayagar
Kalki vinayagar

அவல் பூரண கொழுக்கட்டை

தேவை: நல்ல கொழுக்கட்டை மாவு  1 கப், நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், பொடி உப்பு சிறிது, தண்ணீர் தேவையானது.

பூரணத்திற்கு: பொடி செய்த அவல் ½ கப், நாட்டு சர்க்கரை ½ கப், ஏலக்காய் பொடி ½ டீஸ்பூன், நெய் கொஞ்சம், பொடி செய்த முந்திரி பருப்பு கொஞ்சம்.

செய்முறை: முதலில் கொழுக்கட்டை மாவைத் தயார் செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் பொடி செய்த முந்திரிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் பொடி செய்த அவல், நாட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறி நன்கு சுருள வந்ததும் இறக்கி ஏலப்பொடி, நெய், வறுத்தெடுத்த முந்திரிப் பருப்புப் பொடியை கலக்கவும். ஆற விடவும்.

சிறிய ஆரஞ்சு பழ உருண்டை அளவு கொழுக்கட்டை மாவை எடுத்து நடுவில் அழுத்தி சிறு செப்பு மாதிரி செய்து அதன் நடுவில் அவல் பூரணத்தை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு வைத்து மூடிவிடவும். இதே மாதிரி மீதி மாவையும் செய்தபின் ஆவியில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க சுவையான அவல் பூரணக் கொழுக்கட்டை ரெடி.

கருப்பட்டி – தேங்காய் மிக்ஸ்டு பிடி கொழுக்கட்டை 

தேவை: நல்ல பச்சரிசி மாவு ½ கிலோ, தேங்காய் துருவியது (ஃப்ரெஷ்) 1 கப், சுத்தம் செய்த கருப்பட்டி  ¼ கிலோ, ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன், தண்ணீர் தேவையானது, நெய் சிறிது.

செய்முறை: வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு பச்சரிசி மாவை மெதுவாக போட்டு மாவைத் தயார் செய்துகொள்ளவும்.

மற்றொரு வாணலியில் கருப்பட்டியைத் தட்டிப்போட்டு இளம்பாகு பதத்தில் காய்ச்சியெடுத்து வடி கட்டவும். சிறிது நெய்யைச் சுடவைத்து தேங்காய்ப் பூவைப் போட்ட லேசாக வறுத்தெடுக்கவும்.

அரிசி மாவில் ஏலப்பொடி, வறுத்த எள், கருப்பட்டி பாகு, வறுத்த தேங்காய்த் துருவல் ஆகியவைகளை போட்டு, கெட்டியாக பிசையவும். இதைக் கொஞ்சமாக நீளவாக்கில் உருட்டி கையில் வைத்து நான்கு விரல்களால் அழுத்தவும். இதே மாதிரி எல்லாவற்றையும் செய்துவைத்தபின், இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்துச் சாப்பிட, வித்தியாசமான ருசியுடன் அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com