Digestive pirandai Powder and Ginger Tamarind!
Digestive recipesImage credit - youtube.com

செரிமானம் தரும் பிரண்டைப் பொடியும், இஞ்சி புளி தொக்கும்!

Published on

ந்த காலமாக இருந்தாலும் நம் உடல் ஆரோக்கியம் மீது நாம் கவனம் தேவை. அதிலும் மழைக்காலம் வந்துவிட்டால் இன்னும் கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் எளிதாக நமது உணவுகள் செரிமானம் ஆகாது என்பதால் அதற்கேற்றவாறு நாம் உணவு தயாரிப்பது அவசியம்.

நம் சமையல் அறையில் இருக்கும் பொருட்களும் நம் முன்னோர் பயன்படுத்திய மூலிகைகளுமே நமக்கு நல்ல உடல் நலத்தை தரக்கூடியவை. முக்கியமாக செரிமானத்தை தூண்டும்  பிரண்டை மற்றும் இஞ்சியை பயன்படுத்தி பொடி மற்றும் தொக்கு வகைகளை இங்கு காணலாம்.

பிரண்டை பொடி

தேவையானவை;
பிரண்டை துண்டுகள் - ஒரு சிறிய கப்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வரமிளகாய் - 4
புளி - சிறுநெல்லியளவு
இஞ்சி - ஒரு சிறு துண்டுகளாக
கடலை பருப்பு உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன்
வெல்லம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தனியா (கொத்துமல்லி) - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை;
அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு மிதமான தீயில் தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து அத்துடன் இஞ்சியை துருவி அதையும் சேர்த்து வதக்கவும். பின்னர் பிஞ்சு பிரண்டையை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளை நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெறும் வாணலியில் தேங்காய் துருவல், கருவேப்பிலை, எள் ஆகியவற்றை தனி தனியாய் வறுத்து  சிறிது வெல்லம் உப்பு சேர்த்து அனைத்தையும் ஆறியதும் மிக்சியில் அரைத்து பொடியாக்கவும். சோறு சூடாக இருக்கும்போது இந்தப் பொடியை  போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ஜோராக இருக்கும். எளிதில் உணவு செரிமானத்தை தரும்.

இஞ்சி புளி தொக்கு

தேவையானவை;
இஞ்சி 1/4 கிலோ
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 6
வெல்லம் - தேவையான அளவு
கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க
மஞ்சள் தூள்-  சிறிது,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்- சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை;
தரமான இஞ்சியை மண் போக கழுவி தோலை சீவி துருவிக் கொள்ளவும். புளியை சிறிது வெந்நீரில் ஊறவிடவும் பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில்  நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கி துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், தேவையான, உப்பு புளி கரைசல் சேர்த்துக் கொதித்ததும் மிதமான தீயில் வைத்து வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  எண்ணெய் பிரிந்து வரும் சமயம் இறக்கவும். இந்த மழைக்காலத்தில் நாக்குக்கு ருசியாக தயிர் சாதத்துடன் தொட்டுக்கொள்ள ஏற்றது இந்த இஞ்சி புளித்தொக்கு.

logo
Kalki Online
kalkionline.com