தெய்வீக மூலிகை வில்வம்!

தெய்வீக மூலிகை வில்வம்!
Published on

வில்வம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சிவபெருமான்தான். வில்வத்தை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யவும் மாலையாகத் தொடுத்து அணிவிக்கவும் பயன்படுத்தலாம் என்று மட்டுமே பலரும் எண்ணி இருப்போம். ஆனால், வில்வம் நமக்கு எந்தெந்த வகைகளிலெல்லாம் பயனளிக்கிறது என்பதைச் சற்றுப் பார்ப்போம். வில்வமர நிழல் மற்றும் காற்றில் பல்வேறு மருத்துவ சக்திகள் இருக்கின்றன.

வில்வ மரத்தின் வேர் உடலில் உள்ள நோய்களை நீக்கி நலம் தரும் மாமருந்தாகும். குருதிக் கசிவை நிறுத்தும் சக்தி இதற்கு உண்டு. வில்வ பழம் மிகச் சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மேலும், நாக்கு புண்களை ஆற்றும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது. காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றையும் குணமாக்கும் தன்மை கொண்டது வில்வப் பழம். இந்தப் பழத்தின் ஓடு காய்ச்சலைப் போக்குவதோடு, தாது எரிச்சலைத் தணிக்கும்.

வில்வத் தளிரை வதக்கி இளஞ்சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுக்க, கண் வலி, கண் சிவப்பு, கண் அரிப்பு போன்றவை குணமாகும். இதன் இலைக்கு காச நோய் போக்குதல், தொற்று நோய்களை நீக்குதல், வெட்டை நோயைத் தணித்தல், பித்தத்தைப் போக்குதல், வாந்தியை நிறுத்துதல், உடல் வெப்பத்தைத் தணித்தல் போன்ற குணங்கள் உண்டு. வில்வ பூவுக்கு வாய் நாற்றத்தைப் போக்கும் சக்திம், விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு.

வில்வ இலையின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு குணமாகும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தயாரித்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி, காதில் விட்டு பஞ்சால் அடைக்க, நாள்பட்ட செவி நோய்கள் நீங்கிவிடும்.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயவைத்து எரித்துக் கரியாக்கி இடித்து பொடி செய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்கள் தொடர்பான நோய்கள் போகும். ஒரு பிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்து எட்டு மணி நேரம் கழித்து, இலைகளை மட்டும் எடுத்து விட்டு நீரை அருந்தி வந்தால் தீராத வயிற்று வலிகள் தீரும், உடல் நலம் பெறும். இந்த நீரை ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் அருந்தி வந்தால் வாத வலிகள், மேக நோய்கள் குணமாகும். வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும். இவை அனைத்தையும் நல்ல சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் செய்து நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com