இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ராகி முறுக்கு மற்றும் அச்சு முறுக்கு செய்முறையை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம்னு பார்க்கலாம்.
ராகி முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்;
ராகி மாவு-2 கப்.
அரிசி மாவு-1/2 கப்.
பொட்டுக்கடலை மாவு-1/4 கப்.
வரமிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
ஓமம்-1 தேக்கரண்டி.
எள்ளு-1 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
வெண்ணெய்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
ராகி முறுக்கு செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பெரிய பவுலில் 2 கப் ராகி மாவு, ½ கப் அரிசி மாவு, ¼ கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கொள்ளவும். காரத்திற்கு வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி, எள் 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு, வெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
இப்போது தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும். கடைசியாக மாவு மீது சூடான எண்ணெய் சிறிது ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். இப்போது சிறிது மாவை எடுத்து அச்சியில் வைத்து வாழை இலையின் மீது நன்றாக அழுத்தி முறுக்கை பிழியவும்.
அடுப்பில் எண்ணெய் சூடானதும் முறுக்கை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெய்யில் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவிட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். சூப்பரான மொறு மொறு ராகி முறுக்கு தயார். நீங்களும் இந்த ரெசிபியை தீபாவளிக்கு வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பாருங்க.
அச்சு முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்;
அரிசி மாவு-1 கப்.
மைதா மாவு-1/2 கப்.
சர்க்கரை-1/2 கப்.
எள்ளு-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
தேங்காய் பால்- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
அச்சு முறுக்கு செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பெரிய பவுலில் 1 கப் அரிசி மாவு, ½ கப் மைதா மாவு, ½ கப் சர்க்கரை, எள்ளு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, தேங்காய்பால் சேர்த்து அச்சியில் ஒட்டும் பதத்திற்கு மாவை பிசைந்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு ஸ்பூனை மாவில் விட்டுப்பார்த்தால் ஸ்பூனின் மேலே மாவு சற்று அடர்த்தியாக ஒட்ட வேண்டும். இப்போது அச்சை எடுத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் சற்று நேரம் முக்கி எடுத்து பிறகு மாவில் முக்கி இப்போது எண்ணெய்யில் விட்டு பொரித்தால் அழகாக அச்சு முறுக்கு அச்சியிலிருந்து பிரிந்து வரும்.
இவ்வாறு அச்சு முறுக்கை அழகாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான மொறுமொறு அச்சு முறுக்கு தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.