தேங்காய் திரட்டிபால் & வெஜிடபிள் வடை!
தேங்காய் திரட்டிபால்!
தேவையானவை:
பாசி பருப்பு - 1 கப், தேங்காய் துருவல் – 1 கப், வெல்லம் – 1 கப், பால் – 1 கப், ஏலப்பொடி – ½ டீஸ்பூன், நெய் – ¼ கப், நெய்யில் வறுத்த முந்திரி -10.
செய்முறை:
பாசிப்பருப்பை இளவறுப்பாக வாசனை வரும்வரை வறுக்கவும். பின்னர்
அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு தேங்காயுடன் சேர்த்து, கெட்டியாக, நைசாக அரைத்துகொள்ளவும். ஒரு அடிகனமான வாணலியில் பாதியளவு நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள விழுது, பால், வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லத்தில் மண் இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கைவிடாமல் சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துகொள்ள வேண்டும். சுருண்டு வரும்போது ஏலப்பொடி மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து கிளறவும். வாணலியில் ஒட்டாமல், கெட்டியாகி சுருண்டு வரும்போது ஒரு நெய் தடவிய தட்டில் வைத்து சமப்படுத்தி வைக்கவும். லேசாக ஆற ஆரம்பித்தும் கத்தியால் துண்டுகள் போடவும்.
இந்த ஸ்வீட் திருநெல்வேலியின் பாரம்பரிய ஸ்வீட். கல்யாணமானாலும் சரி; எந்த விசேஷமானாலும் சரி; இந்த தேங்காய் திரட்டிபால் கண்டிப்பாக இடம் பெறும்.
வெஜிடபிள் வடை!
தேவையானவை:
உளுந்து - 1 கப், கடலைப்பருப்பு – ¼ கப், வெங்காயம் - பொடியாக நறுக்கியது, கோஸ், கேரட், கொத்தமல்லி – ½ கப், சோம்பு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, மிளகாய் வற்றல் - 2, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:
பருப்புகளை 2 மணி நேரம் ஊறவைத்து வடித்துவைக்கவும். ஒரு கைப்பிடி பருப்பை தனியாக எடுத்துவைக்கவும். மிக்சியில் பருப்புகளையும் மிளகாய்களையும் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைக்கவும். துளிக்கூட தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். உப்பும் காய்கறிகளும் சேர்க்கும்போது மாவு தளர்ந்துகொள்ளும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் தனியாக எடுத்து வைத்த ஊறிய பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளாக தட்டி சிவக்க பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிக சூடு இல்லாமல் மிதமான தீயில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வடை மேல் பாகம் சிவந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.
- உமா ஸ்ரீதரன்