
இந்த தீபாவளிக்கு நான் சொல்லப்போகும் ஸ்பெஷல் ஸ்வீட் செய்து அசத்துங்கள். இந்த ஸ்வீட்டை பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் அது அவர்களின் சருமத்தைப் பளபளக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
கஸ்டர்ட் பவுடர் - ½ கப்
பப்பாளி பழம் - 1 கிலோ
நெய் - ¼ கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
இந்த ஸ்வீட் செய்வதற்கு நீங்கள் பயன்படுத்தும் பப்பாளி நன்றாக பழுத்திருக்க வேண்டும். குறிப்பாக இனிப்பு சுவை அதிகம் கொண்டதாக இருக்க வேண்டும். அதேசமயம் அளவுக்கு அதிகமாகவும் பழுத்திருக்கக் கூடாது. ஏனெனில் அதிகமாக பழுத்த பழத்தின் சுவை மாறியிருக்கும் என்பதால் ஸ்வீட்டின் சுவையைக் கெடுத்துவிடும்.
பப்பாளி பழம் கிடைக்காதவர்கள் அன்னாசி, மாம்பழம் போன்ற பழங்களையும் பயன்படுத்தி செய்யலாம். பப்பாளி பழம் உடலுக்கு அதிக சூடு கொடுக்கும் என்பதால், அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் சாப்பிடுவது நல்லது.
முதலில் பப்பாளி பழத்தை நன்கு கழுவி அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து சர்க்கரை, பால், கஸ்டர்ட் பவுடர், சேர்த்து கலக்க வேண்டும். அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் கலக்கி வைத்துள்ள கலவையை சேர்த்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பத்து நிமிடங்களில் இந்த கலவை கெட்டியாக மாறத்துவங்கும்.
அந்த சமயத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு வரும். இறுதியில் கடாயில் ஒட்டாதவாறு அல்வாவாக மாறியதும் மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து சமப்படுத்தி அரை மணி நேரம் வைத்தாலே நன்றாக செட்டாகிவிடும்.
இறுதியில் அதை உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் வெட்டி அனைவருக்கும் பரிமாறலாம்.