
இப்பொழுது மண்பாண்டங்களை உபயோகிப்பது, மண்சட்டிகளில் குழம்பு வைப்பது, தயிர் தோய்ப்பது என்று அதிக நேரங்களில் தொடங்கிவிட்டோம். அதிக மக்களின் புழக்கத்திற்கு இந்த மண்பாண்டங்கள் வந்துவிட்டது என்றாலும், அதனை எப்படி பராமரிப்பது என்பது இன்னும் அதிகமானோருக்கு தெரியாத விஷயமாகவே இருக்கிறது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்!
மண்சட்டிகளில் கருப்பு, காவி என்று இரண்டு நிறங்கள் உள்ளன. இயல்பான சட்டி ஒருமுறை சூலையில் சுட்டதாகும். கருப்பாக இருப்பது இரண்டு முறை சுடுவதால் நிறம் மாறி வருகிறது. ஆனால், இரண்டில் சமைத்தாலும் உடலுக்கு ஒரே மாதிரி சத்துக்கள்தான் கிடைக்கும். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.
மண்சட்டிகளை வாங்கி வந்த உடன் அதில் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றிவைத்து தினமும் நன்றாக பழக்கிவிட வேண்டும்.
தயிர் ஊற்றி வைக்கும் பாத்திரங்களை நன்றாகக் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். அப்பொழுதுதான் அதில் பூஞ்சை பிடிக்காது. மழைக்காலத்தில் இன்னும் கவனமுடன் இருப்பது மிக அவசியம்.
மண்பாண்டங்களில் சமைக்கும்போது மரக்கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும்.
மேலும் மண்சட்டிகளில் குழம்பு வைக்கும்போது அதை அணலில் வைத்து சூடு பட்டவுடன் எண்ணெய் ஊற்றி தாளிதம் செய்யக்கூடாது. அது மாதிரி செய்தால் சீக்கிரமாகவே சட்டியில் விரிசல் ஏற்பட்டுவிடும். ஆதலால் சட்டியில் குழம்பை கூட்டி வைத்துவிட்டு, வேறு ஒரு பாத்திரத்தில் தாளிதம் செய்து இதில் கொட்ட வேண்டும். இதுபோல் செய்தால் குழம்பு வைக்கும் சட்டிகள் நீண்ட நாள் உழைக்கும். இல்லையேல் சட்டியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து தாளிதம் செய்யலாம். இதையும் எப்பொழுதாவது செய்வதுதான் நல்லது.
எக்காரணத்தைக் கொண்டும் தயிர் தோய்த்த மண் பாத்திரங்களை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. நாம் உபயோகித்தது போக மீதி இருக்கும் தயிரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றிய பிறகே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
தண்ணீர் பிடித்து வைக்கும் மண் குடத்தை அவ்வப்போது நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து பிறகு பயன்படுத்துவதே சிறந்தது. இல்லையேல் உள்ளில் பாசி பிடிக்கும் அபாயம் உண்டு.
இதுபோல் பாதுகாத்தால் மண்பாண்டங்கள் நீண்ட ஆயுளுடன் நீடிக்கும். ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுக்கும்.
மண்பாண்டங்கள் விரிசல் விட்டு சமைக்க முடியாதபடிக்கு இருந்தால் அதை அப்படியே தூக்கி வீச வேண்டியது இல்லை. அதில் மணல், எரு நிரப்பி மல்லி, புதினா போன்ற செடிகளை வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் சமையலுக்கு பயன்படும்.