Mushroom Fries
Mushroom Fries

உடல்நலம் காப்பான் காளான்! காளான் ட்ரை(dry) ஃப்ரை செய்யத் தெரியுமா நண்பா?

Published on

காளான் தற்போது, ஓர் உணவுப் பொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்‘ என்ற அலட்சியப் புறக்கணிப்பு மறைந்து மனித உடல் நலத்துக்கான அதன் அருங்குணங்களால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

பட்டன் காளான், போர்டோபெல்லோ காளான் (ஐரோப்பிய நாடுகளில் பிரபலம்), ஷிடேக் காளான், சிப்பிக் காளான், ஏனோகி காளான், ஷிமேஜி காளான், போர்சினி காளான், வைக்கோல் காளான், பால் காளான், மொட்டு காளான் என்று பலவகைப்படும். இவற்றில் பட்டன் காளான், வைக்கோல் காளான், சிப்பிக் காளான், பால் காளான், மொட்டுக் காளான் ஆகியவை தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடியவை. 

இவற்றோடு விஷக்காளான் வகைகளும் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டுகொண்டு விலக்க வேண்டும். பொதுவாக கடைகளிலும், ஓட்டல்களிலும், உடல்நலனுக்கு உகந்த காளான்களே விற்கப்படுகின்றன, பரிமாறப்படுகின்றன. 

காளான் பிற காய்கறிகளைப் போல சைவ உணவுப் பொருள்தான் என்றாலும், இதனைக் கடித்து சுவைக்கும்போது இறைச்சி உணவை ருசிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். ஆகவே அசைவ உணவுவகைகள் தமக்கு ஒத்துப்போவதில்லை என்றாலும், அதைத் தவிர்க்க விரும்புபவர்கள், அந்தக் கடிசுவைக்கு அடிமையாகியிருக்கிறார்கள். இத்தகையவர்களுக்கு, மட்டன், சிக்கன், மீன் வகையறாக்களுக்குச் சரியான மாற்று (கடித்துச் சுவைப்பதில்) காளான் என்றே சொல்லலாம். 

சரி, இப்போது காளான் ரெஸிபி ஒன்றைப் பார்க்கலாமா?

காளான் ட்ரை ஃப்ரை:

என்னென்ன தேவை:

காளான் – 200 கிராம் (பட்டன் காளானாகக் கிடைத்தால் இந்த ரெஸிபிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்)

வெங்காயம் – 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (இரண்டாகக் கீறியது)

மிளகாய்ப் பொடி – 1 டீ ஸ்பூன்

தனியா பொடி – 1 டீ ஸ்பூன்

சீரகம் – அரை டீ ஸ்பூன்

கசகசா – அரை டீ ஸ்பூன்

சோம்பு – அரை டீ ஸ்பூன்

பட்டை – சிறு துண்டு

 இஞ்சி – ஒரு சிறு துண்டு

பூண்டு – 10 பல்

தயிர் – 1 டீ ஸ்பூன்

எண்ணெய் – 4 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்துமல்லி – சிறிதளவு

எப்படிச் செய்வது?

முதலில் காளானை ஈரத்துணியால், மண் போக நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு, கழுவி, ஒவ்வொன்றையும் நான்கு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி-பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸியில் சீரகம், சோம்பு, கசகசா, பட்டை கிராம்பைப் போட்டு சன்னமாக அரைத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் கடாயை ஏற்றி எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், பச்சை மிளகாய், வெங்காயத் துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். 

ஒரு பாத்திரத்தில், காளான் துண்டுகள், அரைத்த விழுது மற்றும் மசாலாப் பொடி, வதக்கிய வெங்காயம், மிளகாய், கூடவே தனியா தூள், தயிர், உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை பிரிட்ஜில் ஒரு மணி நேரத்துக்கு வையுங்கள். 

இதையும் படியுங்கள்:
ஆடி வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு புட்டு சமைக்கலாமா?
Mushroom Fries

அடுத்ததாக அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரிட்ஜிலிருந்து எடுத்த காளான் கலவையை அதில் போடுங்கள். அடுப்பை ஸிம்மில் வைத்து எரிய விடுங்கள். காளானில் நீர் வற்றி அது சிவந்து வரும்வரை காத்திருங்கள். 

பிறகு கடாயை இறக்கி அதில் கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை தூவிக் கொள்ளுங்கள். 

காளான் ட்ரை ஃப்ரை ரெடி! இதனை சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். வெறுமே சாதத்தோடு கலந்தும் உட்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com