சாப்பாட்டில் ரசம் இல்லாமல் உணவு சாப்பிட முழு திருப்தி கிடைக்காது. உடல்நிலை சரியில்லை என்றால் ரசம், கல்யாண விருந்தில் ரசம் என்று நம் தென்னிந்திய மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போன ரசம் உருவானக் கதை தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ரசம் என்பது ‘இரசம்’ என்னும் தமிழ் வார்த்தையிலிருந்தும், ‘ரசா’ என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்தும் வந்ததாக சொல்லப்படுகிறது. இரண்டிற்குமே ‘சாறு’ என்பதே பொருளாகும். இதை 16 ஆம் நூற்றாண்டில் மதுரையில் கண்டுப்பிடித்ததாக நம்பப்படுகிறது.
ரசம் முதல்முதலாக மதுரையில் பாண்டிய மன்னன் காலத்தில்தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஒருமுறை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் மகன் நோய்வாய்ப்பட்டுக் கிடந்ததால், அவரால் எதையும் சரியாக சாப்பிட முடியவில்லை.
இதனால் பாண்டிய மன்னன் தனது மகன் சாப்பிடக்கூடிய அளவிற்கு யார் உணவு சமைத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்தார். அப்போது ‘கருணாஸ்' என்ற பிராமணர் புளிக்கரைச்சலோடு எளிமையாக கிடைக்கக்கூடிய மிளகு, சீரகத்தைப் பயன்படுத்தி அருமையான ரசத்தை தயாரித்து பாண்டிய மன்னனின் மகனுக்கு கொடுக்கிறார்கள். அதை அவர் சாப்பிட்டது மட்டுமில்லாமல் அவரின் உடலும் சரியாகிவிட்டது. அதனால், மன்னர் அவரை பாராட்டி ஆயிரம் பொற்காசுகளையும் கொடுக்கிறார். மேலும் சிலர் இந்த ரசம் மதுரையில் இருக்கும் சௌராஸ்ட்டிர மக்களால் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ரசம் நம்முடைய பாட்டி கை வைத்தியமாக கருதப்படும் ஒரு உணவாகும். இதை சூப் போலவும் சாதாரணமாக அருந்தவும் நன்றாக இருக்கும். தக்காளி, மிளகு, ஜீரகம், புளி கரைச்சல், பூண்டு, கொத்தமல்லி என்று அனைத்தையும் சேர்த்து செய்யப்படும் ரசம் புளிப்பாக உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கொடுக்க ஏற்றதாகவும் இருக்கும்.
ரசம் உண்பதால் ஏற்படும் நன்மைகள், ஜீரணம் மற்றும் செரிமானப் பிரச்னையை சரிசெய்யும், அதிகமாக விட்டமின் மற்றும் மினரல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது, சீக்கிரமே செரிமானம் ஆகக்கூடிய உணவாகும், அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் சருமப் பிரச்னைகளைப் போக்கும், உடல் எடையை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கு உதவுகிறது. இத்தகைய பெருமைமிக்க ரசத்தை ‘புளிச்சர்’ என்றும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.