‘ரசகுல்லா’ என்றது நல்ல வெள்ளை நிறத்தில் நிலவைப் போல உருண்டையான பந்து நினைவுக்கு வரும். பாலால் ஆன இந்த இனிப்பை குலாப் ஜாமுனுக்கு தங்கை என்று கூட கேலியாக சொல்வதுண்டு. அத்தகைய சிறப்புமிக்க ரசகுல்லாவிற்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருமாநிலங்கள் சண்டையிட்டுக் கொண்டது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கொல்கத்தா மாநிலத்தில் 1868 ஆம் ஆண்டு நாபின் சந்திரதாஸ் என்னும் மிட்டாய் வியாபாரி இந்த ரசகுல்லாவை முதல் முதலில் செய்து அதை வெற்றிகரமாக விற்பனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர் நேபாளுக்கு செல்லும்போது அங்கே சாப்பிட்ட சீஸ்ஸை பயன்படுத்தி செய்யப்பட்ட இனிப்பு போலவே முயற்சிக்க எண்ணி ரசகுல்லாவை உருவாக்கினார்.
‘ரோசா’ என்றால் ஜூஸ் ‘கொல்லா’ என்றால் உருண்டை பந்து என்றும் பொருள். இந்த இனிப்பு விரைவில் பெங்கால் முழுவதும் பிரபலமடைந்தது. இவர் தயாரித்த ரசகுல்லா தான் உண்மையான மற்றும் சிறந்த வெர்ஷனாக சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாக ரசகுல்லாவை உலகில் உள்ள மக்கள் ரசித்து, ருசித்து உண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் ரதயாத்திரையின் போது லக்ஷ்மி தாயாரை கோவிலிலே விட்டுவிட்டு ரதயாத்திரைக்கு போய்விடுவார். இதனால் கோபம் கொண்ட லக்ஷ்மி தாயார் ஜெகநாதரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து கதவை சாத்திக்கொள்வார்.
பின்பு லக்ஷ்மி தாயாரை சமாதானம் செய்வதற்காக இந்த ரசகுல்லாவை அவரே தயாரித்து லக்ஷ்மி தாயாருக்கு கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். இந்த சடங்கிற்கு 'Niladri bije' என்று பெயர். ஜெகநாதர் கடைசி நாள் கோவிலுக்கு திரும்பி வரும்நாள்தான் ரதயாத்திரையின் கடைசி நாளாகும். இந்த இனிப்பை ‘ரசகோலா’ என்று 15 ஆம் நூற்றாண்டு நூலான ஜெகமோகன ராமாயனாவில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த இரண்டு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 2017ஆம் ஆண்டு கொல்கத்தா ரசகுல்லாவிற்கும், 2019 ஆம் ஆண்டு ஒடிசா ரசகுல்லாவிற்கும் புவிசார் குறியீடு வழங்கியுள்ளனர். எப்படியிருந்தால் என்ன நமக்கு இனிப்பான ரசகுல்லா கிடைச்சது வரைக்கும் மகிழ்ச்சி.