எங்கெங்கோ விதவிதமான தோசை ரெசிப்பியை படித்தும், சோம்பலால் ப்ளெயின் தோசை, ஆனியன் தோசை, ஊத்தப்பம் என்று சுற்றிச் சுற்றி வருபவரா நீங்கள்? அட தோசைதானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
ஒரே ஒருமுறை தோசைக்கு அரைத்துவிட்டு ஒரு வாரம் முழுவதும் விதவிதமான தோசைகளை செய்து அசத்தலாம் வாருங்கள்.
இந்தத் தோசைகளை சாப்பிடக் கொடுக்கும் ஒவ்வொரு நேரமும், அதன் மகத்துவத்துக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் உங்களுக்குள்ள அக்கறைக்காகவும், தோசையில் சரிவிகித உணவு படைக்கும் உங்கள் சாமர்த்தியத்துக்காகவும் காலரை(?) தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தினம் இரவு ஏதாவது தானியத்தையோ, பயறையோ ஒரு கப் ஊற வைக்கவும். அது கம்பு, கேழ்வரகு, சோளம் (உருண்டை), பச்சைப் பயறு, தட்டைப் பயிறு, சோயா, கொண்டைக் கடலை எதுவாகவும் இருக்கலாம். காலையில் ஊற வைத்ததை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இரண்டு கப் தோசை மாவுக்கு ஒரு கப் தானிய மாவு என்று சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடையில் கிடைக்கும் வெறும் மாவு, சத்து மாவு இவைகளையும் பயன்படுத்தலாம். இவை நாம் பிரஷ்ஷாக ஊற வைத்து அரைப்பது போல் வராது. தினம் ஒரு தானியம், பயறு என்றும் செய்யலாம். எல்லா தானியங்களையும் பயறுகளையும் கலந்து செய்யலாம்.
இவ்வாறு கலந்த மாவில் வெறும் தோசையும் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கொத்துமல்லித் தழை, கருவேப்பிலை தாளித்துக் கொட்டியும் செய்யலாம்.
இந்தத் தோசைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
சோள தோசைக்கு மட்டும் சோளம் நன்றாக ஊற வேண்டும். மற்ற தானியங்கள் எட்டு மணி நேரம் என்றால் சோளத்துக்குப் பதினான்கு மணி நேரம் தேவைப்படும். ரொம்ப அதிக நேரம் ஊறினாலும் தானியங்கள் புளித்துவிடும். தோசையின் சுவையும் கெட்டுவிடும்.
பயறுகளை ஊறவைத்து அரைக்கும்போது தோலோடு பயன்படுத்துவது நல்லது. கொஞ்சமாக முளை கட்டியும் பயன்படுத்தலாம். அதிகமாக முளை வந்துவிட்டால் தோசை மாவு கொஞ்சம் கசக்க ஆரம்பித்துவிடும்.
பயறுகளையும் தானியங்களையும் ஊற வைக்கும்போது முதலிலேயே நன்றாகக் கழுவி ஊற விட வேண்டும். ஊறிய பின்னர் கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் பாதிக்கு மேல் அழிந்துவிடும்.
இவ்வாறு கலந்த தோசை மாவை முடிந்தவரை உடனே பயன்படுத்துவது நல்லது. அதிக பட்சம் இந்த மாவை பிரிட்ஜில் பன்னிரெண்டு மணி நேரம் வரை வைக்கலாம்.
இவ்வாறு தானியங்கள் பயறுகள் கலந்த தோசை மாவிலோ அல்லது வெறும் தோசை மாவிலோ இந்த தோசைகளை செய்யலாம்.
முட்டை தோசைக்கு முட்டையில் சிறிதளவு உப்புப் போட்டு நன்றாக அடித்துக்கொண்டு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி, கலந்து கொள்ளவும். தோசையை ஊற்றியவுடன் மேலே சிறிதளவு எண்ணெய் விட்டு, தோசை பாதி வெந்த பின்னர்தான், தோசையின் மேல் பரப்பில் நாலைந்து ஸ்பூன் முட்டைக் கலவையை விட்டு அரை நிமிடத்திலேயே திருப்பிப் போட்டு உடனே எடுத்து விடுங்கள். திருப்பிப் போட்ட பின்னர் அதிக நேரம் கல்லில் தோசை இருந்தால் முட்டை சீக்கிரம் கருகிவிடும்.