பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஊட்டச்சத்தற்ற குளிர்பானங்களையும் எனர்ஜி ட்ரிங்குகளையும் அருந்தும் இன்றைய தலைமுறையினர், அவசியம் புளித்த பானங்களில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
புளித்த பானங்களை பருகுவதால் உண்டாகும் நன்மைகள்:
புளிக்க வைக்கப்பட்ட பானங்கள், விட்டமின்கள் மற்றும் புரோ பயாட்டிக்குகள் நிறைந்தவை. இவற்றைத் தொடர்ந்து பருகுவதன் மூலம் குடல் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பளபளப்பாக மின்னும். உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து இளமைத் தோற்றத்துடன் திகழலாம். இவற்றை வீட்டிலேயே தயாரித்து பருகலாம் என்பது சிறப்பம்சமாகும்.
புளிக்க வைக்கப்பட்ட பானங்கள்.
இந்தியர்களின் தினசரி உணவில் அவசியம் இடம் பிடிக்கும் பொருட்கள் தயிர் அல்லது மோர். காய்ச்சிய பாலை ஆற வைத்து சிறிதளவு தயிர் சேர்த்து உறை ஊற்றப்பட்டு தயிர் தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிது நீர் சேர்த்து மோர் தயாரிக்கப்படுகிறது. இது கோடைக் காலத்தில் அனைவராலும் விரும்பப்படும் பானமாகும்.
இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பராமரிக்கவும், செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவும். குறைந்த கலோரிகளும், அதிகமான புரோபயாட்டிக்குகளும் கொண்ட தயிரும் மோரும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குகின்றன.
கிரீமி தயிர் சேர்த்து செய்யப்படும் பானம். இதனுடன் சர்க்கரை, மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழக்கூழ் சேர்த்தும் அருந்தலாம். இதிலுள்ள நீர்ச்சத்து உடலை நீரேற்றத்துடன் வைக்கிறது. இதிலுள்ள கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமாகும். குடல் ஆரோக்கியத்திற்கும் சருமம் பளபளப்பாக மின்னுவதற்கும் உதவுகிறது.
சமைத்த சாதத்தில் நீர் ஊற்றி வைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலையில் சிறிதளவு உப்பு, மோர் சேர்த்து அந்தத் தண்ணீரை அருந்தலாம். இது உடலுக்கு சிறந்த குளிர்ச்சியைத் தருகிறது. நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதால் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் தன்மையை அதிகரிக்கிறது.
கொதிக்கும் நீரில் கம்புக் குருணை அல்லது ராகி மாவு, சோள மாவு, திணை மாவு போன்ற ஏதாவது ஒன்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, ஆற வைத்து அவற்றை புளிக்க வைக்க வேண்டும், மறுநாள் அது நொதித்து, புளித்திருக்கும். இவற்றில் மோர் சேர்த்து அருந்தலாம்.
இது தமிழ்நாடு முழுக்கவே கிராமங்களில் கடைபிடிக்கப்படும் நடைமுறையாகும். நொதிக்க வைக்கப்பட்டதால் இதில் நுண்ணுயிரிகள் உருவாகி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவற்றில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். செரிமானத்திற்கும் உகந்தது.
கெபீர் தானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு புளித்த பால் பானமாகும். இதில் நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் உள்ளது. தயிரைப் போலவே இதிலும் புரோபயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஜீரணிக்க எளிதாக இருக்கும். இளமை தோற்றத்தை தக்க வைக்கும். வலுவான முடி மற்றும் நகங்களை உருவாக்கும்.
அரிசியை 24 - 48 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைத்து அதைப் புளிக்க வைக்கவேண்டும். அந்த நீரை வடித்து, உப்பு, மோர் கலந்து குடிக்கலாம். இதில் விட்டமின்கள் பி, சி உள்ளன. உடலின் இளமை தோற்றத்தைத் தக்க வைக்கும் கொலாஜன் அளவைப் பராமரிக்கிறது. தோல் தொய்ந்து போவதைக் குறைக்கிறது. குடல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
புளிக்க வைக்கப்பட்ட இனிப்புத் தேநீரில் இருந்து தயாரிக்கப்படும் பானமாகும். இதை ஒரு வாரம் நொதிக்க வைக்கவேண்டும். இதனால் புத்துணர்ச்சியூட்டும் ப்ரோபயோட்டிக்குகள் நிறைந்த காரமான பானம் கிடைக்கும். இது இளமை தன்மையை தக்கவைத்து, உடல் சுருக்கத்தை குறைத்து கல்லீரல் நச்சு நீக்கத்தை ஆதரிக்கிறது. சிறந்த குடல் ஆரோக்கியம் தருகிறது.