

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரபலமான டோயோசு மீன் சந்தை (Toyosu fish market) செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலையில் நடைபெறும் ஏலத்தில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக, ஜப்பானின் வடகடற்கரையான ஓமா கடற்கரையில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க கடும் போட்டி நிலவும்.
அதேபோல் இந்த புத்தாண்டையொட்டி நடைபெற்ற ஏலத்தில், இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் 510.3 மில்லியன் யென் (3.2 மில்லியன் டாலர்) விலைக்கு ஏலம் போனது ஒரு டுனா மீன். இந்திய மதிப்பில் ரூ.28 கோடிக்கு ஏலம் சென்று சாதனை படைத்துள்ளது. இந்த டுனா மீனின் எடை 234 கிலோ ஆகும்.
சுஷி சான்மாய் உணவகச் சங்கிலியின் உரிமையாளரான கியோஷி கிமுரா, இந்த மீனை ஏலத்தில் வாங்கியுள்ளார். 'டுனா மன்னன் 'என்று அழைக்கப்படும் கிமுரா, புத்தாண்டு ஏலங்களில் புளூஃபின் டுனாவை அதிக விலைக்கு ஏலம் எடுப்பதில் வல்லவர்.
கிமுரா 2012 ஆம் ஆண்டில் ஒரு புளூஃபின் டுனா மீனுக்கு 56.5 மில்லியன் யென் மற்றும் 2013 இல் 155 மில்லியன் யென் ஏலத்தில் செலுத்தியுள்ளார். இரண்டு முறையும் சாதனை விலையை நிர்ணயித்தார். 2019 ஆம் ஆண்டில் அவர் 333.6 மில்லியன் யென் ($2.1 மில்லியன்) கொடுத்து ஒரு புளூஃபின் டுனாவை வாங்கினார் - இது மற்றொரு வரலாற்று விலை. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில், இதே போல் டுனா மீன் ஒன்றை ரூ.18 கோடிக்கு வாங்கினார்.
கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த இந்த டுனா மீன்கள் அதன் தனித்துவ சுவைக்கு பெயர் பெற்றது. கடலில் வேகமாக நீந்தக்கூடிய இந்த மீன்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது.
ஏலத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கியோஷி கிமுரா, "நான் இந்த மீன் விலை மலிவாக இருக்கும் என நினைத்தேன். இந்த விலையை எதிர்பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு அழகான ஒரு டுனாவைப் பார்க்கும்போது, என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை. அதிக விலைக்கு வாங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான விலையிலே உணவு கட்டணம் வசூலிக்கப்படும்" என தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் டோக்கியோவின் டொயோசு மீன் சந்தையில் நடைபெறும் முதல் ஏலத்தில் பொதுவாக மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படும். இங்கே திமிங்கில கறி கூட விற்கப்படுகிறது. ஜப்பானியர்கள் திமிங்கலத்தை "கடலின் கரப்பான் பூச்சி"என்கிறார்கள்.
கடந்த ஆண்டு, ஏலத்தில் முதல் டுனா மீனை 207 மில்லியன் யென்களுக்கு வாங்கியது, இது சுஷி சங்கிலியை வைத்திருக்கும் மற்றொரு உணவு நிறுவனமான ஒனோடெரா குழுமத்தால் வாங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அதன் உணவகங்களில் இந்த மீன் பரிமாறப்பட்டது.
டோக்கியோவில் அதிகாலை ஏலங்களின்போது மீன் சந்தைகளில் காணப்படும் பரபரப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 05:00 மணிக்கு (GMT 20:00 மணி) தொடங்கிய திங்கட்கிழமை ஏலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
கிமுராவின் சுஷி உணவகங்களில் ஏலம் விடப்பட்ட சிறிது நேரத்திலேயே, மில்லியன் டாலர் மதிப்புள்ள டுனா மீன் வாடிக்கையாளர்களுக்காக வெட்டப்பட்டது. பின்னர் சுஷி சங்கிலி உணவகங்களில் ஒரு டூனா மீன் துண்டு 500 யென் (ரூ 300) விலைக்கு விற்கப்பட்டது.
"ஆண்டு தொடங்கும்போது மிகவும் புனிதமான ஒன்றை சாப்பிட்ட பிறகு, நான் இந்த ஆண்டை நல்ல முறையில் தொடங்கியதாக உணர்கிறேன்," என்று கிமுராவின் உணவகத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.