உணவு பொரிக்கும் யோசனைகள்!

உணவு பொரிக்கும் யோசனைகள்!

நாம் எத்தனை விதமாக சமைத்தாலும் எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவுகளுக்கு எப்போதுமே வரவேற்பு ஸ்பெஷல்தான். விருந்தாக இருந்தாலும் சரி, விசேஷமாக இருந்தாலும் சரி, எண்ணெய்ப் பதார்த்தங்களுக்குத் தனியிடம்  உண்டு. பொதுவாக எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவுகள் அதிக மணமும், சுவையும், கவர்ந்திழுக்கும் தோற்றமும் கொண்டவை. இதனால்தான் இதை பல் முளைத்த குழந்தைகள் முதல் பல்போன கிழவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கின்றனர். தற்காலத்தில் அனைவரும் எண்ணெய் பலகாரங்களை சுவைக்க நினைத்தாலும் உடல் நிலையினால் தவிர்க்க நினைக்கிறோம். இருந்தாலும் பண்டிகை, விசேஷ நாட்கள் என்றால் தவிர்க்க இயலாததாகிவிட்டது. அப்படி பொரிக்கும்போது செய்ய வேண்டியவைகளையும் கடைபிடித்தால் நம் உடலுக்கும் கஷ்டமில்லை. பணத்திற்கும் நஷ்டமில்லை.

1. பொரிக்க வாங்கும் எண்ணெய் அறை வெப்பநிலையில் பாதுகாத்தலே போதுமானது.

2. திட கொழுப்பான நெய், டால்டா போன்றவைகளில் பொரித்தெடுப்பதைவிட திரவ எண்ணெய்களில் பொரிப்பது நல்லது.

3. நல்ல சுத்தமான எண்ணெய் காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

4.எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்துப் பொரிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எண்ணெய் காய்ந்த பின்தான் அடுத்த உணவை பொரிக்க வேண்டும்.

5. உணவை பொரிக்கும் கடாயில் மூன்றில் இரண்டு (2/3) பங்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

6. சில சமயம் எண்ணெய் பொங்கி வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எண்ணெயில் போட்டால் பொங்காது,

7.எண்ணெய் நன்கு காய்ந்த பின்தான் உணவை பொரிக்க வேண்டும். இல்லையெனில் உணவின் ருசியும் மென்மையும் மாறி கடினமாகிவிடும்.

8. சட்டியில் எண்ணெய் குறைய குறைய பாத்திரத்தில் சிறிது சிறிதாக எண்ணெய் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் சத்துக்கள் வீணாகாது.

9. உணவு நன்கு வெந்த பின்னரே எண்ணெயிலிருந்து எடுக்க வேண்டும். இதை அறிய எண்ணெய் (சொய்ங்) சத்தம் அடங்கி காணப்படும். இவ்வாறு இருந்தால் உணவு வெந்துவிட்டது என்று பொருள். இல்லையெனில் உணவு ஜீரணமாகாது.

10. எண்ணெயிலிருந்து உணவை எடுக்கும்போது சிறு துகள்கள்கூட விடாமல் அனைத்தையும் நீக்க வேண்டும்.

11. உணவு வெந்தவுடன் உடனடியாக எண்ணெயிலிருந்து எடுத்து விட வேண்டும். இல்லையெனில் எண்ணெய் கோர்த்துக்கொள்ளும்.

12. ஒருமுறை பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதில் உள்ள சத்துகள் வீணாகிவிடுகிறது. மேலும், இதை நீண்ட நாள் வைத்துப் பயன்படுத்தும்போது அதில் விஷத்தன்மை வந்துவிடும். எனவே உடனுக்குடன் பயன்படுத்தி விட வேண்டும்.

13. உணவை எண்ணெயிலிருந்து எடுக்கும்போது எண்ணெயை நன்கு வடித்துவிட வேண்டும். தேவைப்பட்டால் செய்தித்தாளை பரத்தி அதன்மீது வைத்தால் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும்.

14. பொரித்த உணவை உடனடியாக மூடக்கூடாது. சிறிது நேரங்கழித்து பலகாரம் ஆறிய பின்னரே மூட வேண்டும்.

15. எண்ணெய் பதார்த்தங்களை உண்ண மதியம் மற்றும் மாலை நேரங்களே சிறந்தது.

- கே. மஹேஸ்வரி

 ( ஜனவரி – 1998 மங்கையர் மலரிலிருந்து...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com