

அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி போன்ற பெயர்களில் குப்பைமேனி அழைக்கப்படுகிறது. இது காடுமேட்டில் எங்கும் காணப்படும் ஒரு மூலிகைச்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. இயற்கையில் மிக எளிதாக கிடைக்கும் குப்பைமேனி செடி, இலை முதல் வேர் வரை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
மருத்துவப் பயன்கள்
குப்பைமேனி இலைச்சாறு:
குப்பைமேனி இலைச்சாறை உட்கொண்டு வந்தால் நெஞ்சுச்சளி நீங்கி, இருமலைக் கட்டுப்படுத்தும்.
சரும நோய்களுக்கு:
குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
முகப்பருக்கள்:
குப்பைமேனி இலையுடன் கற்றாழைச்சாறு கலந்து, சிட்டிகை மஞ்சள் சேர்த்து முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். அது உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் பருக்கள் குறைய தொடங்கும்.
தழும்புகள் மற்றும் வடுக்கள்:
குப்பைமேனி இலைச்சாறுடன் மஞ்சள், கற்றாழைச் சாறு, ஒரு பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் நாள்பட்ட தழும்புகள், புண்கள், வடுக்கள் குணமாகும்.
குப்பைமேனி இலை எண்ணெய்;
குப்பைமேனி இலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். இதனை தடவினால் புண்கள் மற்றும் பாதங்களின் வெடிப்பு போன்றவை குணமாகும்.
பேஷியல் பேக்;
குப்பைமேனி இலைகளை கொண்டு முகத்திற்கு பேஷியல் பேக் செய்யலாம். குப்பைமேனி இலை, புதினா இலை, துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் கெட்டி தயிர் அல்லது பசும்பால் இரண்டு ஸ்பூன் கலந்து அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.
முகத்தை சுத்தம் செய்து, முகம் முதல் கழுத்து வரை பேக் போடவும். அரைமணி நேரம் வரை உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
இந்த பேக்கில் உள்ள புதினா சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக மாற்றும். குப்பைமேனி இலை முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கும்.
தயிர் இயற்கையான ப்ளீச் போன்று செயல்பட்டு முகத்தை சுத்தமாக்கும்.