கமகமக்கும் கல்யாண பந்தி வத்த குழம்பின் சுவைக்கான இரகசியம் இதுதானா?

வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
Published on

த்தனையோ விதவிதமான வத்தக்குழம்புகள் இருந்தாலும், கல்யாண பந்தியில் பரிமாறப்படும் வத்தக் குழம்பின் சுவையும் மணமும் அலாதிதான்.
(சென்ற வாரம் ஒரு கல்யாணத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த சமையல் மன்னனிடம் கேட்டறிந்த செய்முறை இது!). வாருங்கள்... செய்து பார்ப்போம்!

* தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, பூண்டு – 25, சுண்டைக்காய் வற்றல்  - 3 ஸ்பூன், மணித்தக்காளி வற்றல் - 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 4  ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு,
தேங்காய் பால் - ¾ கப், கடுகு - 1½ டீஸ்பூன், வெந்தயம் - ½ டீஸ்பூன், சீரகம் - ½ டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, வெல்லம் - ½ டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப

* செய்முறை:
முதலில் புளியை தேவையான அளவு தண்ணீரில்  கரைத்து, புளிக்கரைசலாக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சுண்டைக்காய் மற்றும் மணித்தக்காளி வற்றலை போட்டு நன்றாகச் சிவக்கப் பொரித்து தனியாக வைக்கவும்.

அதே எண்ணெய்யில் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, கட்டி பெருங்காயத்தைப் போட்டு தாளித்தபின் - பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் ஓரளவிற்கு பொன்னிறமாக வதங்கியவுடன் பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். வதக்கியபின், குழம்பு மிளகாய் தூள் மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரியும்போது, கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்து  நன்றாகக் கலக்கவும்.

கடைசியாக சுவைக்கேற்ப உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்தபின் மிதமான தீயில் 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி 5 நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் மூடி வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்துவரும் தருவாயில், வறுத்து வைத்துள்ள சுண்டை, மணித்தக்காளி வற்றல்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும். அவ்வளவுதான்! கமகமக்கும் கல்யாண பந்தி வத்தக்குழம்பு தயார்! ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள்... நிச்சயம் சொக்கிப்போவீர்கள்!

இதையும் படியுங்கள்:
வளமான வாழ்வு தரும் வண்ண உணவுகள்!
வத்தக்குழம்பு

இந்த வத்தக்குழம்பின் நாவில் நீர் ஊற வைக்கும்
சுவைக்கான இரகசிய குறிப்புகள் :

* குழம்புக்கான நல்லெண்ணெய் தரமானதாக இருக்க வேண்டும். செக்கு நல்லெண்ணெயாக இருந்தால் இன்னும் சிறப்பு.
* சுண்டைக்காய், மணித்தக்காளி வற்றல்களில் அரைப்பங்கு அளவைக் கைகளால் பொடித்து சேர்க்கவேண்டும்.
* தூள் பெருங்காயத்தைவிட தரமான கட்டிப் பெருங்காயம் அதிக மணம் தரும்.
* கடைசியில் எல்லாம் முடிந்து வாணலியை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிட்டால் - குழம்பின் வாசம் தலைக்கேறும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com