வீட்டிலேயே தயாரிக்கலாம் மணமான, சுவையான நெய்!

வீட்டிலேயே தயாரிக்கலாம்  மணமான, சுவையான நெய்!

ற்போது 500 மில்லி நெய் 350 ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் தரமானதா என்றால் இல்லை, கலப்படம் செய்து விற்கிறார்கள். காசையும் கொடுத்து கலப்படத்தை வாங்கி நாம் ஏன் சாப்பிட வேண்டும்? வீட்டிலேயே மிகவும் அருமையாக நெய் தயார் செய்யலாம். நான்  கடந்த 20 வருடங்களாக வெளியில்’ நெய் வாங்கியதே இல்லை வீட்டிலேயே தயாரிப்பதுதான் வழக்கம். அதன் செய்முறையை தருகிறேன்.

தினமும் அரை லிட்டர் பசும்பால் வாங்கி அதை அடுப்பில் வைத்து காய்ச்சியதும் இரண்டு மணி நேரம் அப்படியே அடுப்பின் மீதே வைத்திருக்க வேண்டும். அதில் மஞ்சளாக பால் ஏடு படியத் தொடங்கும். சூடு ஆறியதும் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, மறுநாள் டீ வடிகட்டியில் அந்த ஆடையை மட்டும் தனியாக வடிக்கவும்.(ஒரு துளி கூட பால் இருக்கக் கூடாது) அந்த ஆடையை ஒரு பாத்திரத்தில் போட்டு சேமித்து வரவேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் தயிரை அதில் ஊற்றி வைத்தால், பால் ஆடை காய்ந்து போகாமல் இருக்கும்.

இருபது நாட்கள் ஆடை சேர்ந்ததும், அதை ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளாலேயே சிறு சிறு கட்டிகளை உடைத்து விட்டு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, விரல் நுனிகளால் கடைவது போல செய்தால் பந்து போல வெண்ணெய் திரண்டு வரும். (மிக்ஸியில் அடித்து கஷ்டப்படவெல்லாம் வேண்டாம்) அதை ஐந்து முறை நன்றாக நீரில் கழுவி விட்டு வாணலியில் வெண்ணையை போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். அவ்வப்போது ஸ்பூனால் கிளறி விட வேண்டும். பத்தே நிமிடங்களில் வெண்ணெய் நெய் பதத்திற்கு வரும்.

தீயைக் குறைத்து, நெய் பொன்னிறமானதும் ஒரு கைப்பிடி முருங்கை கீரை இல்லையென்றால் கருவேப்பிலை போட்டு அது நன்றாக பொரிந்ததும், நெய் லேசான பிரவுன் நிறத்தை அடைந்திருக்கும். அடுப்பை அணைத்து நெய்யை இறக்கி, ஒரு மனைப் பலகையில் வைத்து ஆற வைத்து, அதை சல்லடையால் வடித்து ஒரு பாத்திரத்தில் சேமித்துக்கொள்ள வேண்டும். கமகம வாசனையுடன் அருமையான நெய் ரெடி! வீட்டு உபயோகத்திற்கும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றுவதற்கும் இந்த நெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com