

குச்சி காளான் புலாவ் (Gucchi Mushroom Pulao):
குச்சி காளான்கள்(மோரல் காளான்) 25 கிராம்
பாஸ்மதி அரிசி 1 கப்
வெங்காயம் 2 மீடியம் சைஸ்
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் அ நெய் தேவையான அளவு
கொத்தமல்லி சிறிதளவு
மசாலா பொருட்கள்: சீரகம்1/2 ஸ்பூன், பட்டை சிறு துண்டு, கிராம்பு 2, ஏலக்காய் 1, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா.
குச்சி காளானை நன்கு சுத்தம் செய்து சிறிது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் (20 நிமிடங்கள்) ஊறவைத்து, பின் தண்ணீரை வடித்து தயாராக வைக்கவும். பாஸ்மதி அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாதியாக வேகவைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது சுத்தம் செய்த குச்சி காளான்களை சேர்த்து மசாலாவுடன் நன்கு கிளறவும். காளான் வேகும்போது நீர்விடும். அந்த நீரை வற்றவிடாமல் வதக்கவும். 1 1/2 கப் தண்ணீர் விட்டு, இப்பொழுது பாதி வெந்த அரிசியை சேர்த்து மெதுவாகக் கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அடிக்கடி கிளறாமல், நன்கு வெந்து பொலபொலவென்று ஆகும் வரை வைத்து எடுக்கவும். புலவில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாக பரிமாற மிகவும் ருசியாக இருக்கும். இத்துடன் நமக்குப் பிடித்த வெங்காய அல்லது வெள்ளரி ரைத்தாவுடன் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.
பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் மிதமான தீயில் 1 முதல் 2 விசில் வரை சமைக்கவும். குச்சி காளான் விலை உயர்ந்தது. அத்துடன் அரியவகை என்பதால் இதை கவனமாக கையாளவேண்டும். குச்சி காளான் கிடைக்காத பட்சத்தில் பொதுவாக கிடைக்கும் காளான்களைக் கொண்டும் இந்த ரெசிபியை செய்யலாம்.
இதே மசாலா பொருட்களை பயன்படுத்தி சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள கிரேவியும் செய்யலாம். அசத்தலான ருசியில் இருக்கும். செய்துதான் பாருங்களேன்!