

நம் உடலில் உள்ள குடலுக்குள் மாதக்கணக்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற 30 கிராம் உப்பை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒன்றே முக்கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைத்து, மறுநாள் காலையில் திரும்பவும் இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, பிறகு எலுமிச்சை சாறு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு டம்ளராக குடித்தால் குடல் சுத்தம் ஆகிவிடும் என்ற வீடியோ அதிகமாக பரவி வருகிறது. இப்படி செய்வதால் உண்மையிலேயே கழிவுகள் வெளியேறுமா? பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
தண்ணீரைக் குடிப்பதால் என்ன நடக்கும்?
மேற்கூறிய முறையில் தயாரித்த உப்பு தண்ணீரை குடிப்பதால் முதலில் கழிவுகள் எப்போதும்போல நார்மலாக வெளியேறும். இரண்டாவதாக பாதி திட (semi solid) நிலையில் செல்லும். மூன்றாவதாக கழிவுகள் மஞ்சள் நிற திரவமாக வெளியேறும். கடைசியாக நாம் குடித்த தண்ணீரே திரவமாக வெளியேறுகிறது. இப்படியாக நம் குடலில் தேங்கியிருக்கும் அனைத்து கழிவுகளும் வெளியேறுவதாக கூறுகிறார்கள்.
இப்படி வீடியோவில் கூறப்படும் கருத்துக்கள் உண்மையிலேயே அடிப்படை ஆதாரம் அற்றது. எந்த மருத்துவ நிபுணர்களும், ஆய்வுகளும் பரிந்துரைக்காதது. இது ஒரு போலி தகவல். மருத்துவர்களின் கூற்றுப்படி இந்த உப்பு நீரை குடிப்பதால் ஐந்து விதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
பக்க விளைவுகள்
1. இந்த உப்பு தண்ணீரை குடிப்பவர்களுக்கு பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு இதன் காரணமாக தசை இறுக்கம், சோர்வு, தளர்ச்சி, மனக்குழப்பம் மற்றும் அதிக படபடப்பு தன்மை ஏற்படுகிறது. சில நேரங்களில் சிலருக்கு இறப்பு வரை கொண்டு செல்லும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
2 . இதய நோய், சிறுநீரகப் பிரச்னை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த உப்பு தண்ணீர் குடிப்பதால் உடல் உறுப்புகளை செயலிழக்க வைத்து இறப்பு கூட நேரிடலாம்.
3. வாந்தி, படபடப்பு தன்மை, வயிறு வலி போன்ற பிரச்னைகள் உப்பு தண்ணீர் குடிப்பதால் குறையும் என இந்த வீடியோவில் பதிவிடப்பட்டிருந்தாலும் ,உண்மையில் மேற்கூறிய பிரச்னை இல்லாதவர்களுக்கும் புதிதாக ஏற்படவே வாய்ப்பு அதிகரிக்கும் என்பது மருத்துவர்களின் கூற்றாக உள்ளது.
4. தினந்தோறும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர் களுக்கு இந்த உப்பு தண்ணீரை குடிப்பதால் மருந்தின் வீரியத்தை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு அதிகம் என்பதால் இவர்களும் உப்பு தண்ணீருக்கு நோ சொல்லி விடவேண்டும்.
5. குடல் தானாகவே 24 முதல் 48 மணி நேர சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ளும். ஆகவே குடலில் நல்ல கிருமிகளும் கெட்ட கிருமிகளும் மட்டுமே சமநிலையில் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் நாம் உப்பு தண்ணீரை குடிப்பதன் மூலம் கிருமிகளின் சமநிலை தன்மையில் ஏற்ற, இறக்கம் ஏற்பட்டு புதிதாக குடல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உண்டு. மேலும் இதுவே நிரந்தரமாவதற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகி அஜீரணம், ஏப்பம், வாந்தி, வாயு தொந்தரவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
ஆகவே, உப்பு தண்ணீர் நடைமுறை என்பது எந்த மருத்துவ முறையாலும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே எந்த ஒரு குறுக்கு வழியிலும் குடலை சுத்தப்படுத்த முயற்சி செய்யவேண்டாம். குடலை சுத்தப்படுத்துவதற்கு இயற்கையிலேயே நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் நம் அன்றாட பழக்க வழக்கங்களில் குடலை சுத்தப்படுத்த முடியும் என்பதால் இத்தகைய போலி செய்திகளை நம்பி ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.