
நெருப்பு கண்டு பிடிக்கப்பட்டதே மாபெரும் விஷயம் என்றால், ஸ்டவ்வைக் கண்டு பிடித்ததும் அதில் பல முன்னேற்றங்களைப் புகுத்தியதும் மிகப்பெரும் புரட்சி என்பதும் உண்மையே!
விறகுகளைத் திணித்து அடுப்பூதியே பெண்கள் பலர் இருமலுக்கும் இதய நோய்களுக்கும் ஆளான காலத்தை, கடந்த காலமாக்கிய பெருமை ஸ்டவ்வுகளுக்கே உண்டு. முதலில் மண்ணெண்ணையால் இயங்கிய அவை, காஸ் அடுப்புகளாக மாறிவிட்டன. அதிலும் சிங்கிள் பர்னர், 2,3,4 என்று பல பர்னர்களுடன், பல மாடல்களும் வந்துவிட்டன. சில நவீன மாடல்களில் பர்னர்களை நீக்கிவிட்டு ஸ்டவ்வுகளையே கட்டர்களாக யூஸ் செய்து கொள்ளும் வசதிகளும் வந்து விட்டன. இந்த ஸ்டவ்வுகளை இயக்கும் காஸ், அரசியலிலும் அங்கம் வகிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியலில் மட்டுமில்லீங்க! சினிமாக்களிலும், சானல்களின் சீரியல்களிலும் கூட காஸ், வில்லன்களின் கையாட்கள் ஆகிவிட்டன.
சரி! கேசட் ஸ்டவ்வை நம்மில் பெரும்பாலோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சுவிட்சர்லாந்தில் அவை புழக்கத்தில் உள்ளன. வெளிநாடுகளில் ‘பார்பிக்யூ’ ரொம்பவும் பிரசித்தம். வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும் பார்க், ஏரி, மற்றும் ஆற்றங்கரைகளிலும் பார்பிக்யூ செய்து சாப்பிடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
நம்ம ஊர்ல கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிடுவதைத்தான் அவர்கள் பார்பிக்யூ என்கிறார்கள். நாம் வீடுகளிலேயே அதனைச் செய்வோம். அவர்களோ, இயற்கை கொஞ்சும் இடங்களில், இயற்கையையும் ரசித்தபடி, வயிற்றுக்கும் உணவிடுகிறார்கள்!
இதற்கென்றே பொதுவிடங்களில் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தயாராக வைத்திருப்பார்கள். அடுப்பு, விறகு, அமர்ந்து சாப்பிட டேபிள் என்று அனைத்தையும் பல இடங்களிலும் காணலாம். விறகுக்குப் பதிலாக இப்பொழுது இந்த கேசட் ஸ்டவ்வுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பார்ப்பதற்கு, நமது குழந்தைகள் சுற்றி விளையாடும் சிறு பம்பரம் போலவே இது தோற்றமளிக்கிறது.
குளிரூட்டப்பட்ட எஃகுவால் (cold rolled steel body) ஆன இது, நாமே வியக்கும் அளவுக்கு நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியது. சுருக்கி வைக்கப்பட்டுள்ள இதனை ஸ்டவ்வாக விரிக்க சில நொடிகளே போதும். சாதாரண ஸ்டவ்வில் உள்ளது போலவே நான்கு தாங்கிகள் மேலெழும்பி பாத்திரங்களைத் தாங்குகின்றன. 120 பவுண்டு வெயிட்டையும் அவற்றால் தாங்க இயலும் என்பது நமக்கு வியப்பைத் தருகிறது!
ஸ்டவ்வுடன் எளிதாக இணைக்கும் விதத்தில் கையடக்க எரிவாயு சிலிண்டர் (Gas Canister) தனியாக உள்ளது. வலுவான,சிறந்த குழாயால் அது இணைக்கப்படுகிறது. அதிலேயே வால்வும் உள்ளது. அதனைத் திறந்ததும் எரிவாயு ஸ்டவ்வுக்குச் செல்கிறது. ஸ்டவ்வில் உள்ள திறப்பான் மூலம் எரிவாயுவின் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இந்த சிறிய சிலிண்டர் சுமார் 19 மணி நேரத்திற்கு வருமாம்!
ஸ்டவ் விரிந்ததும் நடுவில் உள்ள பர்னரில் சுமார் 300 தனிப்பட்ட துவாரங்கள் மூலம் வாயு வெளிவந்து நீல வண்ணத்தில் எரிந்து அதிக வெப்பத்தைத் தந்து சமையலை எளிதாக்குகிறது. கெட்டிலுள்ள நீரைக் கொதிக்கவைக்க 30 விநாடிகளே போதுமாம். 4000 மீட்டர் உயரத்தில்கூட இந்த ஸ்டவ் நன்றாக வேலை செய்யுமாம்!
சுவிட்சர்லாந்தில் பூமி மட்டத்திலேயே குளிர் அதிகமாக இருக்கும்.4000 மீட்டர் உயரத்தில் எவ்வளவு குளிர் இருக்குமென்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!
என்னங்க! இது நம்ம ஊருக்கு எப்ப வரப்போகுதுன்னுதானே யோசிக்கிறீங்க? உடனே இதனைப்பார்த்து வர ஒரு ரவுண்டு சுவிஸ் போயிட்டுத்தான் வாங்களேன்!