லஞ்ச் பாக்ஸ்க்கு இத விட பெஸ்ட் ரெசிபி இல்லை... புரதச்சத்து நிறைந்த பிளாக் சன்னா புலாவ்!

Black Chickpea Pulao
Black Chickpea Pulao
Updated on

மதிய உணவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போதெல்லாம், கைகொடுக்கும் ஒரு அருமையான ரெசிபிதான் இந்த 'கருப்பு கொண்டைக்கடலை புலாவ்' (Black Chickpea Pulao). கருப்பு சுண்டலில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அபரிமிதமாக இருப்பதால், இது ஆரோக்கியத்திற்கும் தசை வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. 

வழக்கமாக சுண்டல் குழம்பு அல்லது சுண்டல் மசாலா செய்து அலுத்துப்போனவர்களுக்கு, இப்படி கமகமக்கும் வாசனை வர குக்கரில் சுடச்சுட புலாவ் செய்து கொடுத்தால், ஒரு பருக்கை கூட மிஞ்சாது. இந்த ஈஸியான, டேஸ்டியான புலாவ் ரெசிபியை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 1 கப்

  • கருப்பு கொண்டைக்கடலை - 1/2 கப்

  • பெரிய வெங்காயம் - 1

  • தக்காளி - 1

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2

  • புதினா மற்றும் மல்லித்தழை - ஒரு கைப்பிடி

  • பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1

  • சீரகம் - 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா அல்லது பிரியாணி மசாலா - 1/2 டீஸ்பூன்

  • நெய் மற்றும் எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

இந்த புலாவ் செய்வதற்கு மிக முக்கியமான முதல் ஸ்டெப், கருப்பு கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே அல்லது குறைந்தது 8 மணி நேரமாவது தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். அப்போதுதான் அது குக்கரில் வேகும்போது அரிசியோடு சேர்ந்து சரியான பதத்திற்கு மிருதுவாக வேகும். அதேபோல, பாஸ்மதி அரிசியை குறைந்தது 20 நிமிடங்களாவது தண்ணீரில் ஊறவைத்து, பின் தண்ணீரை முழுமையாக வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
தயிரை அடுப்பில் வைப்பவரா நீங்கள்? அப்படிச் செய்யலாமா? அதிர்ச்சித் தகவல்கள்...
Black Chickpea Pulao

இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். சீரகம் பொரிந்ததும், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்குங்கள். 

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அடுத்ததாக, நறுக்கிய தக்காளி, புதினா மற்றும் மல்லித்தழையைச் சேர்த்து, தக்காளி தொக்கு பதத்திற்கு நன்கு குழையும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

தக்காளி நன்கு வதங்கியதும், ஊறவைத்துள்ள கருப்பு கொண்டைக்கடலையைத் தண்ணீரின்றி வடித்து இதில் சேர்க்கவும். கூடவே மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் எண்ணெயிலேயே பிரட்டி விடுங்கள். 

இப்போது ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, அரிசி உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறவும். ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, உப்பு காரம் சரிபார்த்துவிட்டு குக்கரை மூடிவிடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சரியாக இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம்.

இதையும் படியுங்கள்:
லட்சம் செலவு பண்ண வேண்டாம்.. இந்த 6 சிம்பிள் ட்ரிக்ஸ் செஞ்சா உங்க வீடு சைலண்ட் ஆகிடும்!
Black Chickpea Pulao

குக்கரின் பிரஷர் முழுமையாக அடங்கியதும் மூடியைத் திறந்து பாருங்கள்; வீடு முழுவதும் மணக்கும் சுவையான 'கருப்பு சுண்டல் புலாவ்' தயார். 

logo
Kalki Online
kalkionline.com