பயத்தமாலாடும், கலவை அப்பமும்!
பயத்தம் பயறு, பயத்தம் பருப்பு, அதன்மாவு என்று அதில் எது செய்தாலும் உடம்புக்கு சத்து கிடைக்கும். ருசியாகவும் இருக்கும். செய்வதும் எளிது. அதில் பயத்தமாவு லாடு செய்வதைப் பற்றி இதோ:
பயத்த மாலாடு:
செய்யத் தேவையான பொருட்கள்:
வறுத்து அரைத்த பயத்தமாவு- ஒரு டம்ளர்
பொடித்த சர்க்கரை- ஒரு டம்ளர்
நெய்- அரை டம்ளர்
உடைத்து பொரித்த முந்திரி- ஒரு கைப்பிடி அளவு
ஏலப்பொடி- ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்யைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். நெய்யைச் சூடாக்கி மாவில் ஊற்றி பிசைந்து சூடாக இருக்கும் பொழுதே உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பயத்த மாலாடு ரெடி. விநாயகர் சதுர்த்திக்கு படைக்கலாமே!
கைத்தல நிறை கனி, அப்பமுடன் அவல் பொரி என்ற பாடலுக்கு ஏற்ப அப்பம் படைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆதலால் சதுர்த்திக்கு எளிமையாக படைக்க அப்பம் இதோ:
அப்பம்:
செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு -அரை கப்
மைதா மாவு- அரைகப்
கோதுமை மாவு -ஒரு கப்
துருவிய வெல்லம் -இரண்டு கப்
துருவிய தேங்காய் -கால் கப்
ஏலப் பொடி -ஒரு டீஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
வெல்லக் கரைசலில் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். மாவுடன் அனைத்து பொருட்களும் நன்றாக கரைந்த உடன் சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்தவுடன், சிறு குழி கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி அப்பங்களாக பொறித்து எடுக்கவும். பெரிய அதிரச அளவுக்கு அப்பங்களைப் பொரித்து வைத்தால் அதிரசம் போலவே அழகாக, ருசியாக இருக்கும். சிறிய சைஸ் அப்பம் போதும் என்றால் பணியாரக் கல்லில் ஊற்றி எடுக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு செய்து அசத்துங்க.