
இந்தியத் தெருவோர உணவுகள் (Street Foods) என்றாலே, நாக்கில் நீர் ஊறும் சுவைகளுக்குப் பஞ்சமிருக்காது. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதனால், தெரு உணவுகளை விரும்புபவர்கள் கூட, உடல் எடை கூடிவிடுமோ என்ற கவலையில், முழு திருப்தியின்றி சாப்பிடுகிறார்கள். ஆனால், சுவையான தெரு உணவுகளைத் தியாகம் செய்யாமல், அவற்றின் ஆரோக்கியமான வடிவங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்.
உடல் எடை அதிகரிக்காத ஆரோக்கியமான தெரு உணவுகள்:
சன்னா சாட்: கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்துக்களின் மிகச் சிறந்த மூலமாகும். சில மசாலாப் பொருட்கள், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சன்னா சாட், ஊட்டச்சத்தும் சுவையும் நிறைந்த ஆரோக்கியமான கலவையாகும். இது உடலுக்கு நன்மைகளைச் சேர்ப்பதுடன், வயிற்றுக்கும் லகுவான உணவாகும்.
பானி பூரி: பலரின் விருப்பமான பானி பூரி, சரியான முறையில் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டால், உண்மையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் சேர்க்கப்படும் பூரியின் மாவில் நார்ச்சத்து உள்ளது. மேலும், நீர், புளி, புதினா மற்றும் சீரகத்தின் கலவை செரிமான நொதிகளைத் தூண்டி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உடலுக்குத் தேவையான நீரேற்றத்தையும் வழங்குகிறது.
பாவ் பாஜி: இது ஒரு பிரபலமான இந்தியத் தெரு உணவாகும். உருளைக்கிழங்கு, தக்காளி, பட்டாணி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் போன்ற பல்வேறு காய்கறிகளைக் கொண்டு தயார் செய்யப்படுவதால், இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. ரொட்டியானது மசாலாப் பொருட்களால் சுவையூட்டப்பட்டு, வெண்ணெய் தடவி பரிமாறப்பட்டாலும், இதில் உள்ள காய்கறிகள் ஆரோக்கியமானவை.
பேல் பூரி: இந்த பிரபலமான சிற்றுண்டி, பொரி, துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள், சிறிது புளி மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பேல் பூரியில் கலோரிகள் குறைவாக உள்ளன. அதே சமயம், இதில் சேர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் அவற்றின் சொந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. இது விரைவான மற்றும் மொறுமொறுப்பான ஆரோக்கியமான தெரு உணவாக அமைகிறது. இது உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படலாம். எனினும், இதில் சேர்க்கப்படும் சாஸின் அளவைக் குறைப்பது நல்லது.
கோதுமை மாவு மோமோஸ்: கோதுமை மாவு கொண்டு தயாரிக்கப்படும் மோமோஸ், எல்லோருக்கும் பொதுவான ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். மைதா மாவில் தயாரிக்கப்படும் மோமோஸ், உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கலாம். ஆனால், கோதுமை மாவு மோமோஸில் உள்ள அதிக நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.