

பொங்கல் விழாவில் கரும்பு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. விவசாயத்தின் வெற்றியையும் செழிப்பையும் குறிக்கும் கரும்பு, அதன் சாறு மூலம் இனிமையான உணவுகளாக மாற்றப்படுகிறது. கரும்புச் சாற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள், சுவையுடன் சேர்த்து பாரம்பரியத்தின் மணத்தையும் தருகின்றன.
கரும்புச்சாறு பணியாரம்
தேவையானவை:
பச்சரிசி – 1 கப்
உளுந்து – ¼ கப்
கரும்புச்சாறு – ¾ கப் (புதியது)
தேங்காய் துருவல் – ½ கப்
ஏலக்காய்பொடி – ½ டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: பச்சரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவி 3–4 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். பணியாரம் மாவு போல சற்று கெட்டியாக இருக்கவேண்டும். அரைத்த மாவில் கரும்புச்சாறு, தேங்காய் துருவல், ஏலக்காய்பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மாவை 6–8 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) மூடிவைத்து புளிக்க விடவும். லேசாக புளித்தால் பணியாரம் மென்மையாக வரும்.
பணியாரக் கல்லை சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றவும். மாவை குழிகளில் ஊற்றி மூடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும். கீழ்புறம் பொன்னிறமாக வந்ததும் திருப்பி மறுபுறமும் சுடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
கரும்புச்சாறு பாயசம்
தேவையானவை:
கரும்புச்சாறு – 2 கப் (புதியது, வடிகட்டியது)
பால் – 1 கப்
சேமியா – ¼ கப்
தேங்காய்பால் – ½ கப்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்பொடி – ½ டீஸ்பூன்
செய்முறை: சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கரும்புச் சாற்றை மட்டும் முதலில் ஊற்றி மிதமான தீயில் 5–7 நிமிடம் கொதிக்கவிடவும். கொதித்த கரும்புச் சாற்றில் சேமியாவை சேர்த்து நன்கு வெந்து மென்மையாகும் வரை சமைக்கவும். சேமியா நன்றாக வெந்ததும் பாலை மெதுவாக சேர்த்து கலக்கவும். குறைந்த தீயில் 5 நிமிடம் சமைக்கவும். சுவையை கூட்ட தேங்காய்பால், ஏலக்காய்பொடி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் எல்லாம் சேர்த்து நன்றாக கிளறவும். பாயசம் சற்று கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் கொதிக்க விடவேண்டாம். நெய் துளிகள் மேலே தெளித்து முந்திரி அலங்கரித்து பரிமாறலாம்
கரும்புச்சாறு லட்டு
தேவையானவை:
கம்புமாவு – 1 கப்
கரும்புச்சாறு – ¾ கப் (புதியது), வடிகட்டியது)
நெய் – ¼ கப்
முந்திரி – 10 (நறுக்கியது)
கிஸ்மிஸ் – 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்பொடி – ½ டீஸ்பூன்
செய்முறை: கனமான பாத்திரத்தில் கம்பு மாவை மிதமான தீயில் மணம் வரும் வரை வறுக்கவும். மாவு கருகாமல் கவனிக்கவும். வேறு பாத்திரத்தில் கரும்புச் சாற்றை ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும். 8–10 நிமிடங்களில் சாறு கெட்டியாகி ஒற்றை கம்பி பாகு நிலைக்கு வரும். பாகு தயார் ஆனதும் வறுத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும். நெய், ஏலக்காய்பொடி சேர்க்கவும். நெயில் வறுத்த, முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து கலக்கவும்.
கலவை கையில் பிடிக்கும் அளவுக்கு சூடாக இருக்கும்போது நெய் தடவிய கைகளால் உருண்டையாக லட்டு செய்யவும். கரும்புச்சாறு பாகு சரியான பதத்தில் இருந்தால்தான் லட்டு உறுதியானதாக வரும் குழந்தைகளுக்கான இயற்கை இனிப்பு ஆக மிகச் சிறந்தது.