மழை மற்றும் குளிர் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் இருமல், சளி, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகள் பாடாய்படுத்தி எடுக்கும். நிறைய பேர் ஆங்கில மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வைத்தியங்களைப் பார்த்து சோர்ந்துபோய், ‘இதற்கு என்னதான் வைத்தியம் பார்ப்பது’ என்ற குழப்பத்தில் தவிப்பதைக் காணலாம். அதிலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டால் பெற்றோர்களுக்கு பெரும் திண்டாட்டம்தான்.
சளி, இருமலால் ஏற்படும் மூச்சுத் திணறல் பிரச்னைகளுக்கு உடலில் நோய் எதிப்புச் சக்தி குறைவாக இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள உடலை எப்போதும் இளஞ்சூட்டுடன் வைத்துக்கொள்வது அவசியம்.
மூச்சுத் திணறல் பிரச்னையை சமாளிக்க, எப்போதும் குடிக்கும் தேநீருக்கு பதில், ஒரு வித்தியாசமான மூலிகை தேநீரைத் தாயாரித்து அருந்தலாம். இந்த மூலிகை தேநீர் மூச்சுத் திணறலில் இருந்து நம்மைக் காப்பதோடு, உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.
இனி, இந்த மூலிகை தேநீர் தயாரிப்பதைக் காணலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு பெரிய டம்பளர் அளவுக்குத் தண்ணீர் வைத்து சூடு படுத்தவும். பிறகு தோல் நீக்கிய ஒரு துண்டு இஞ்சி, இரண்டு ஏலக்காய், ஒரு துண்டு லவங்கப்பட்டை, ஐந்து மிளகு மற்றும் மூன்று கிராம்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிய உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். பின்னர் அதில் ஐந்து துளசி இலைகளைக் கழுவி சேர்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும். இந்தக் கலவை சேர்ந்த தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் ஒரு டம்பளர் காய்ச்சிய பாலை சேர்க்கவும். அதன்பின் உங்களுக்குத் தேவையான இனிப்பின் அளவுக்கு வெல்லத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
நன்கு கொதித்ததும் வடிகட்டி மூலம் ஒரு டம்பளரில் ஊற்றி, தாங்கும் அளவு சூட்டில் அருந்தலாம். மழை, குளிர் காலங்கள் மட்டுமின்றி, எப்போது மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும் காலை, மாலை வேளைகளில் இந்த தேநீரைத் தயாரித்து அருந்துவது நல்ல பலனைத் தரும்.