
நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான கபாப் உணவுகளை சுவைத்திருந்தாலும், இப்போது நாம் செய்யப்போகும் புதுமையான சுரைக்காய் கபாப் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை. ஏன், இதுபற்றி கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டீர்கள். ஆனால் வீட்டிலேயே மிக சுலபமாக செய்யக்கூடிய இந்த சுரைக்காய் கபாப் உங்கள் சுவை நரம்புகளுக்கு சிறந்த விருந்தாக அமையும். மேலும் சுரைக்காயில் உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் இந்த கபாப் உணவு உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 200 கிராம் துருவியது
சோள மாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சோம்பு தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சாஸ் - ¼ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
பிரட் கிரம்ஸ் - 4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் சுரைக்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். அதேபோல கருவேப்பிலை, மல்லி, வெங்காயம் போன்றவற்றை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
சுரைக்காயை ஒரு கடாயில் போட்டு தண்ணீர் சுண்டும் வரை வதக்க வேண்டும். சுரைக்காய் வதங்கியதும் அதை தனியாக எடுத்துவிட்டு அதே வானலியில் வெங்காயம், கருவேப்பிலை, மல்லி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்.
பின்னர் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைய வேண்டும். அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பிசைந்த கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்து, சோள மாவு மற்றும் பிரட் கிரம்சில் முக்கி எடுத்து எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்கவும். நீளவாக்கில் போட்டு பொரித்தால் கபாப் பார்க்க நன்றாக இருக்கும்.
இதை குழந்தைகளுக்கு கொஞ்சம் சாஸ் கொடுத்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் சில காய்கறிகளையும் பன்னீரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.