மழைக் காலத்திற்கு 'ஹாட் - கோன் மசாலா!

மழைக் காலத்திற்கு 'ஹாட் - கோன் மசாலா!

கோன் கூம்பு தயாரிக்க:

அமுல் ஸ்பிரே, லாக்டோஜன் டின்னின் உட்புறம் வரும் அலுமினியத் தகடுகள் - 3 இதனை இரண்டிரண்டாக வெட்டி, வட்டத்தை விட்டமாக்கிக்கொள்ளவும். ஒவ்வொன்றையும் சுருட்டிக் கூம்பு தயாரிக்கவும். கூம்பு விரிந்து விடாமல் இருக்க ஒரு கனமான ஊசி நூல் கொண்டு ஒரு தையல் போடவும். தற்போது 6 கோன்கள் தயார்.

கோன்கள் தயாரிக்க:

தேவையான பொருட்கள்:

மைதா 200 கிராம்,  டால்டா – 1 டேபிள் ஸ்பூன், சீரகப் பவுடர் – ½  டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ¼  டீஸ்பூன்,  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் ¼ கிலோ (250 கிராம்),

செய்முறை:

மாவுடன் டால்டா, சாமான்கள் அனைத்தும் சேர்த்து நீர் தெளித்து மிகக் கெட்டியாகப் பிசையவும். ½ மணி நேரம் வைத்திருந்து மீண்டும் பிசைந்து சப்பாத்திகளாக இடவும். ஒரு சப்பாத்தி இட்டவுடன் கத்தி கொண்டு ஓர் அங்குல அகலத்திற்கு ரிப்பன்போல் வெட்டவும். அந்த ரிப்பன் மாவினைக் கோனுக்கு வெளிப்புறம் எண்ணெய் தடவிக்கொண்டு பம்பரத்தில் நூல் சுற்றுவதுபோல் மாவு ரிப்பனை மெதுவாக அழகாகச் சுற்றவும். இதுபோல் 6 கோன்களைச் சுற்றியவுடன் வாணலியில் எண்ணெய் சுட வைத்து கோன்களை மெதுவாகப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். பொரிந்த கோனைத் தட்டி அலுமினியத் தகட்டினை நீக்கி மீண்டும் சுற்றிச் சுற்றிப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். இந்த மாவில் சுமார் 20 கோன் தயாரிக்கலாம்.

மசாலா தயாரிக்க:

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 100 கிராம், உருளைக் கிழங்கு - 150 கிராம், வெங்காயம் - 100 கிராம், கசகசா - 20 கிராம்,  இஞ்சி - சிறிய துண்டு,  பூண்டு - 4 பற்கள்,  முந்திரிப் பருப்பு - 10,  ஜாதிக்காய்த் தூள் - 1 சிட்டிகை,  கரம் மசாலாத் தூள்  - ½ டீஸ்பூன், மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,  மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்,  ஜீரா பவுடர் – ½ டீஸ்பூன், தனியர் பவுடர் - ½  டீஸ்பூன்,  மாங்காய்த் தூள் – ½  டீஸ்பூன்,  உப்பு – தேவைக்கேற்ப. மீடியம் சைஸ் காலி ஃப்ளவர் –1,  எண்ணெய் - 5 ஸ்பூன்.

செய்முறை:

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நசுக்கிக்கொள்ளவும். கசகசா, தேங்காய், முந்திரிப் பருப்பு (4) ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.பட்டாணியைத் தனியாக வேக வைத்து இறக்கவும். காலி ஃப்ளவர் பூவினை ஒவ்வொரு மலராக இரண்டு விரல் பருமனளவிற்குப் பிரித்தெடுத்துக்கொள்ளவும். இதனைத் தனியாக உப்பு, மஞ்சள் தூள் கலந்த  நீரில் திட்டமாக வேக வைத்து இறக்கிக்கொள்ளவும். இதன்மேல் மிளகுத்தூள் தூவவும். உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, முந்திரி பொரித்து வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கினைப் பிசைந்து பட்டாணி சேர்த்து வதக்கி, கரம் மசாலா, மிளகாய், ஜீரா,தனியா, மாங்காய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு, தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிவிடவும்.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளைக் கொண்டாடுவோம்!
மழைக் காலத்திற்கு 'ஹாட் - கோன் மசாலா!

அலங்கரிக்க:

பிரட் ஸ்லைஸ் - 6, வெண்ணெய் - 20 கிராம், வெங்காய ஸ்லைஸ் - 10,  காரட் ஸ்லைஸ் - 10. - பீட்ரூட் ஸ்லைஸ் - 10, எலுமிச்சம் பழ ஸ்லைஸ் - 10, கொத்துமல்லித் தழை - 1 கட்டு,

ரொட்டியை வெண்ணெய் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக்கொள்ளவும். தற்போது ஒரு டப்பா போன்று இருக்கும். நடுப்புறம் வட்டமாக வெட்டிக்குழி செய்துகொள்ளவும். இதில் தயாரித்துள்ள கோனை மலர் ஜாடியில் மலர் அடுக்குவதுபோல் அடுக்கிக்கொள்ளவும்.

கொத்துமல்லிக் கட்டினை வேர் மட்டும் நீக்கிவிட்டுக் காம்புடன் கோனின் உட்புறம் விளிம்பில் இலை மட்டும் தெரியும்படி ஒவ்வொன்றிலும் அடுக்கவும். அதன் நடுவில் ஹாட் மசாலாவை நன்கு நிரப்பவும். ஸ்பூன் கொண்டுச் சற்றுக் குத்தித் திணிக்கவும். காலிஃப்ளவர் பூவினை அதன்மேல் செருகி விடவும். கேரட், பீட்ரூட், எலுமிச்சம்பழ ஸ்லைஸ்களை ரொட்டியைச் சுற்றி அவரவர் விருப்பப்படி அலங்கரிக்கவும். தற்போது கோன் மசாலா மலர்க் கொத்து தயார். கண்கவரும் மலர்க்கொத்து மிகவும் ருசிக்குமே, நாவிற்கே!

- ஆர். சந்திரா, சேலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com