நீண்ட நேரம் பசி தாங்கும் சப்பாத்தி உப்புமா செய்வது எப்படி?

healthy cooking recipes
How to make chapati upma?
Published on

வீட்டில் ஏதாவது மீந்துவிட்டால் அதை எப்படி மாற்றி சமைப்பது என்று அனைவரும் யோசிப்பது உண்டு. அதற்கு மிகவும் வசதியானது சப்பாத்தியை பொடித்து உப்புமா செய்வதுதான். உப்புமா செய்வது மிகவும் எளிதான காரியம். பெரும்பாலும் வீட்டில் ரவையில்தான் உப்புமா செய்வோம். அதேபோல அரிசி, சேமியா, சிறுதானியங்கள் என்று பல்வேறு விதமாக உப்புமா செய்து அசத்தலாம். இவை எல்லாவற்றையும் விட சப்பாத்தி உப்புமா செய்வது மிகவும் சீக்கிரமாக சமையலை முடிக்க முடியும். அதை நல்ல ருசி உள்ளதாக சமைத்தால் அனைவரும் விரும்பி உண்பர். அதன் செய்முறை விளக்கம் இதோ:

செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவில் செய்த சப்பாத்தி மீந்தது- நான்கு

பெரிய வெங்காயம்- ஒன்று

பச்சை மிளகாய்- இரண்டு

இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்- ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை- ஒரு ஆர்க்கு

முந்திரி பருப்பு -எட்டு

கடுகு, கடலைப்பருப்பு- தாளிக்க தேவையான அளவு

நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சப்பாத்திகளை துண்டங்கள் ஆக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு ,முந்திரி பருப்பு, தாளித்து அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் பொடித்த சப்பாத்தி பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். மதியத்திற்கு லஞ்சுக்கும் எடுத்து செல்வதற்கும் மிகவும் பொருத்தமான உப்புமா இது. ரவை உப்புமாவை அனைவரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இது போன்று சப்பாத்தி உப்புமாவை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.

இந்த உப்புமாவுடன் கேரட், பீன்ஸ், கேப்ஸிகம், காலிபிளவர் போன்றவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி தாளிதத்தோடு சேர்த்து செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
விரைவான விருந்து! அசத்தலான சிங்கப்பூர் ஃப்ரெய்டு ரைஸ் செய்முறை!
healthy cooking recipes

தாளிக்கும் பொருட்களுடன் வேர்க்கடலையையும் சேர்த்து தாளிக்கலாம். மீந்துபோன சப்பாத்தியை பொடிக்காமல் கத்தியால் சிறு சிறு துண்டங்களாக வெட்டியும் காய்கறி சேர்த்து வதக்கி உப்புமா செய்யலாம். காலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்ற உணவு இது.

இதற்குப் புதிதாக சப்பாத்தி செய்யவேண்டிய அவசியம் இல்லாததால் இரவில் மீந்ததை காலையில் பொடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்பொழுது செய்து கொடுக்க ஈசியாக இருக்கும். சில நேரங்களில் காலையில் எழும்ப நேரம் ஆகிவிட்டால் இதுபோல் செய்து கொடுத்து சமாளிக்கலாம்.

சப்பாத்தியை பொடித்து அதனுடன் சூடான நெய், வெல்லப்பொடி நட்ஸ் ஃப்ளேக்ஸ் கலந்தும் சாப்பிடலாம். அதையே உருண்டையாக்கி லட்டு போல் செய்தும் சாப்பிடலாம்.

இந்த சப்பாத்திகளை கத்தியால் நீள நீளமாக அரிந்து அதில் நூடுல்ஸ் போல் செய்து கொடுத்தும் அசத்தலாம். தொட்டுக்கொள்ள சாஸ், கெச்சப் போதும்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் அளவோடு சாப்பிடுவதற்கு ஏற்ற உப்மா இது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி தாங்கும். ஆதலால் வீட்டில் மிகுந்த சப்பாத்திகளை தூக்கி வீசாமல் இதுபோல் மாற்றி யோசித்து பயன்படுத்தி சிற்றுண்டி செய்வதை எளிமையாக்குவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com