
பாலக் பன்னீர் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பாலக் இலை 250 கிராம்
2.பன்னீர் 200 கிராம்
3.ஆலிவ் ஆயில் 2½ டேபிள் ஸ்பூன்
4.பெரிய வெங்காயம் 2
5.பெரிய தக்காளி 1
6.உரித்த பூண்டுப் பல் 6
7.பச்சை மிளகாய் 2
8.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
9.சிவப்பு மிளகாய் தூள் 1½ டீஸ்பூன்
10.கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்
11.கோலாபூரி மசாலா தூள் 1 டீஸ்பூன்
12.கடுகு 1 டீஸ்பூன்
13.சீரகம் ¾ டீஸ்பூன்
14.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்
15.ஓமம் ¾ டீஸ்பூன்
16.உப்பு தேவையான அளவு.
செய்முறை:
பாலக் இலைகளை சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும் அதில் பன்னீர் துண்டை அப்படியே போட்டு, சிறு தீயில், முன்னும் பின்னும் திருப்பி விட்டு இரண்டு நிமிடம் பொரித்தெடுக்கவும்.
உடனே அதை குளிர்ந்த நீரில் மூழ்க வைத்துவிடவும். பூண்டு, பச்சை மிளகாய்களை பொடிசா நறுக்கிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் மசிய அரைத்துக் கொள்ளவும். இன்னொரு வெங்காயத்தையும் தக்காளியையும் பொடிசா நறுக்கி வைக்கவும். வேகவைத்த பாலக் இலைகளை மிக்ஸியில் போட்டு, இலைகளை வேகவைத்த தண்ணீர் சிறிது சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 1½ டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி சிறு தீயில் சூடாக்கவும். அதில் அரை டீஸ்பூன் கடுகு, சீரகம் சேர்க்கவும். அவை வெடித்ததும் கரம் மசாலா தூள், கோலாபூரி மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வறுக்கவும். அதில் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயப் பேஸ்டை ஊற்றவும். அதனுடன் நறுக்கிய தக்காளி வெங்காய துண்டுகளைப் போட்டு நன்கு கலந்துவிடவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு மூடி மசாலா பச்சை வாசனை போகும் வரை சிறு தீயில் வைத்திருக்கவும்.
அதே நேரம் குளிர்ந்த நீரிலிருந்து பன்னீர் துண்டை வெளியில் எடுத்து ஆறு நீள சைஸ் துண்டுகளாக நறுக்கவும். அவற்றை கடாயில் உள்ள மசாலாவுடன் சேர்த்து நன்கு புரட்டிப் புரட்டி மசாலா பன்னீர் துண்டுகளில் ஒட்டும்படி மெதுவாக கலக்கவும்.
பிறகு அரைத்து வைத்த பாலக் பூரீ (puree) யை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பன்னீர் உடைந்துவிடாமல் மெதுவாக கலந்து விடவும். கிரேவி பதத்தில் இருக்குமாறு, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கி விடவும்.
பிறகு இன்னொரு கடாயில் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு, பெருங்காயம், ரெட் சில்லி பவுடர் சேர்த்து வறுத்து பன்னீர் மசாலாவில் கொட்டவும். பின் ஓமத்தை கையில் வைத்து நசுக்கி கிரேவி முழுக்க தூவி விடவும்.
ரொட்டி, பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையான பாலக் பன்னீர் தயார்.