

எங்கள் பாட்டி நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது எங்களுக்கு குழிப்பனியாரம் செய்து தருவார்கள். பனியாரத்துடன் தேங்காய்ச்சட்னி மற்றும் வெல்லப்பாகு வைத்து அந்த பனியாரத்தை சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்! பனியாரம் எல்லோருக்கும் பற்றாக்குறையாகிவிடும்.
அப்படிப்பட்ட அந்தக் குழிப்பனியாரம் எங்கள் பாட்டி எப்படி செய்தார்கள் என்ற செயல்முறையை இனி விரிவாய்க் காண்போம்.
தேவையான பொருட்கள்:
½ படி பச்சரிசி
¼ படி புழுங்கல் அரிசி
100 கி உளுந்து
400 கி வெல்லம்
ஏலக்காய்
100 கி வெந்தயம்
நல்லெண்ணெய் (அ) நெய்
மண்ணால் செய்யப்பட்ட பணியாரச்சட்டியாக இருந்தால் சிறப்பு , சோடா உப்பு, சுக்குப்பொடி
செய்முறை:
மேற்கண்ட அளவுகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்னர் ஆட்டு உரலில் நல்ல பக்குவத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு சோடா உப்பு போட்டு வெளியில் 5 மணிநேரம் வரை வைக்கவும். பின்னர் வெல்லத்தை நன்றாக தண்ணீர் ஊற்றிக் காய்ச்சிக் கொண்டு அதில் ஏலக்காய், சுக்குப் பொடி ஆகியவற்றினை நன்றாக கலந்து வெல்லப்பாகு தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
நீங்கள் தயாரித்து வைத்த வெல்லப்பாகை அரைத்து வைத்த மாவுடன் ஒன்றாகக்கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் பனியாரச்சட்டியை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் எதையாவது ஒன்றை குழியில் ஊற்றவும். பின்னர் ஒவ்வொரு குழியிலும் பனியார மாவை எடுத்து ஊற்ற வேண்டும். ஊற்றிய பிறகு அதனை மூடி கொண்டு மூடிவைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து பார்க்கும்போது பனியாரம் வெந்து இருக்கும். அதை பனியாரம் சுடும் கம்பியால் குத்தி திருப்பிவிடவும்.
பின்னர் ஒவ்வொரு குழியிலும் சிறிதாக எண்ணெய் விட்டால் பனியாரம் ரொம்ப மொரு மொருவாக வரும். அதனை ஒவ்வொன்றாக குத்தி பனியாரத்தை எடுக்கவும். ஏலக்காய், சுக்குப்பொடி ஆகியவை இந்த பனியாரத்தில் சேர்த்து இருப்பதால் நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.
இதனை தேங்காய்ச்சட்டினி மற்றும் வெல்லப்பாகு வைத்து சாப்பிட்டால், பனியாரம் இருந்ததற்கு உண்டான தடையமே இல்லாமல் போய்விடும். அந்த அளவுக்குச் சுவையாக இருக்கும். உடனே இப்பவே பனியாரம் செய்து சாப்பிட ஆரம்பிச்சுருவிங்க…