பார்லியில் நார் சத்து அதிகம் உள்ளது. ஊட்டச்சத்து மிக்க பார்லி உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி சிறந்து விளங்குகிறது. இது உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இதில் விட்டமின் பி உள்ளதால் நரம்புகளை பலப்படுத்தும். காலை உணவில் பார்லியை அதிகம் சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். இதனை அப்படியே வேகவைத்து அரிசி சாதம் போல் சாப்பிடலாம். அல்லது கோதுமையைப் போல இதனை மாவாக அரைத்து வந்து சப்பாத்தி, தோசை, இட்லி என செய்து அசத்தலாம். பார்லி சூப் உடலுக்கு மிகவும் நல்லது. கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு பார்லியை கஞ்சியாகவோ சூப்பாகவோ செய்து கொடுக்க பாதங்கள் நீர் கோர்த்து வீங்கி கொள்ளாது.
தேவையானவை:
பார்லி 1 கப்
கோதுமை ரவை 1/2 கப்
உப்பு தேவையானது
மிளகாய் 4
தயிர் 1/2 கப்
செய்முறை:
பார்லியை இருமுறை களைந்து மூன்று மணி நேரம் கழித்து உப்பு , மிளகாய், கோதுமை ரவை (ஒரு மணி நேரம் ஊறியது), தயிர் சேர்த்து அரைக்கவும். அரைத்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடவும். பிறகு இட்லி வார்க்க சத்தான இட்லி மாவு ரெடி. இதில் தோசையும் வார்க்கலாம் ருசியாக இருக்கும். இந்த பார்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடல் எடைையை குறைக்க வல்லது. மலச்சிக்கலை போக்கும். உடல் வறட்சியை போக்கும் குணம் கொண்ட பார்லியை கஞ்சியாகவோ, இட்லிி, தோசையாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பார்லி இட்லியுடன் 'எள் துவையல்' சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.