ஸ்ரீவில்லிபுத்தூர் தட்டு வடை ரொம்ப ஸ்பெஷல். மிகவும் ருசியுடன் ரொம்ப சூப்பராக இருக்கும். மாலை நேரங்களில் இந்த தட்டுவடைக்காகவே மக்கள் வரிசை கட்டி நிற்பார்கள். அம்புட்டு ருசியாக இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா மட்டுமில்லை இந்த தட்டு வடையும் மிகவும் பிரபலம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள் மக்களே!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு 2 கப்
கடலை மாவு ஒரு கப்
உப்பு தேவையானது
காரப்பொடி 1ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
சோம்பு ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
வெங்காயம் 2
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பற்கள்
பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை சிறிது
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
எண்ணெய் பொரிக்க
ஒரு பாத்திரத்தில் ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் விட்டு காரப்பொடி, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கையால் நன்கு கலக்கி விடவும்.தோல் நீக்கி நசுக்கி வைத்த இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு கடைசியாக இரண்டு கப் அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து எண்ணெய் சூடானதும் கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாக பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும். இதற்கு ஆப்ப சோடா ஏதும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு மொறுமொறுப்பாக மிகவும் சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் தட்டு வடை தயார்.
கொங்கு நாட்டு ஸ்பெஷல் புளி வடை!
புழுங்கலரிசி 2 கப்
துவரம் பருப்பு 3/4 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
உப்பு தேவையானது
புளி சிறு எலுமிச்சை அளவு
மிளகாய் 10
சீரகம் 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 3/4 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
எண்ணெய் பொரிக்க
இந்த புளி வடையை புழுங்கல் அரிசியில் செய்ய மிகவும் ருசியாக இருக்கும். புளி சிறிது சேர்த்து அரைத்து தட்டப்படும் இந்த வடை நன்கு உப்பிக்கொண்டு அசத்தலான ருசியில் இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக பாத்திரங்களில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் களைந்து நீரை ஒட்ட வடித்து உப்பு, புளி, மிளகாய், தேங்காய், சீரகம், தோல் உரித்த சின்ன வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நைசாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
மாவை வழிப்பதற்கு முன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நான்கு நான்கு வடைகளாக தட்டிப்போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இந்த புளி வடை நன்கு உப்பிக் கொண்டு பூரி போல் வரும். மிகவும் ருசியான இந்த புளி வடையை வாழை இலையில் சற்று பெரியதாக தட்டிப் போட பார்வைக்கும் அழகு சாப்பிடவும் ஜோராக இருக்கும்.